வியாழன், 25 ஆகஸ்ட், 2016

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! எழுந்து நிற்க எழுது! கவிஞர் இரா. இரவி.

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !


 எழுந்து நிற்க எழுது!
கவிஞர் இரா. இரவி.

*****
தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்
எழுந்து நிற்க எழுது! விழித்தெழ  எழுது!
கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்
குமுகாயம் சிறக்க எழுந்து நில்!
“தூங்காதே தம்பி தூங்காதே” என்று
திரைப்படத்தில் பட்டுக்கோட்டை எழுதினார்!
விழித்தெழு! விழித்தெழு! என்று பலரும்
வெள்ளித்திரையில் பாடல் பாடினார்கள்!
தமிழனின் தூக்கம் களைய வில்லை
தட்டி எழுப்புவோம் எழுத்தால் தட்டி எழுப்புவோம் ! 
உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!
உலகின் முதல்மனிதன் தமிழன் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!
அம்மா அப்பா என்று நல்ல
அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்கையில்!
ஆங்கிலத்தில் மம்மி டாடி என்கிறான்
ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றான்!
‘மம்மி’ என்றால் செத்தபிணமென்று பொருள்
மம்மியின் பொருள் அறியாது விரும்புகின்றான்!
உலகம் முழுவதும் தமிழன் வாழ்கின்றான்
உள்ளூரில் தமிழ் வாழ்கின்றதா? இல்லை!
பேருந்து நிலையத்தை 'பஸ் ஸ்டாண்டு' என்கிறான்
தொடர்வண்டி நிலையத்தை 'ரயில்வே ஸ்டேசன்' என்கிறான்!
இப்படியே தமிங்கிலம் பேசிப் பேசி
இனிய தமிழ்மொழியைக் கொல்கிறான்
தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை என்பது
தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது!
பேசுகின்ற பேச்சில் ஆங்கிலத்தைக் கலந்து
பைந்தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றான்!
பத்துச் சொற்கள் பேசினால் அதில்
பாதிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள்!
தாய்மொழி குசராத்தியை காந்தியடிகள் நேசித்தார்
தனது வரலாற்றை குசராத்தி மொழியில் எழுதினார்!
டால்சுடாயின் வழி திருக்குறளை நேசித்தார்
டால்சுடாயின் வழி தமிழை வாசித்தார்!
அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் பயில
அற்புத  தமிழனாகப் பிறக்க விரும்பினார்!
நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர்
நாளும் விரும்பியது அவரது தாய்மொழி வங்க மொழி!
மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தமிழ்வழி
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து மனதில் நின்றார்!
விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் அனைவரும்
விரும்பிப் பயின்றது தாய்மொழி தமிழ்மொழி!
ஆரம்பக்கல்வி அழகுதமிழில் இருந்தால்
அறிவாளியாக குழந்தைகள் வளரும்!
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!
இல்லாதவன் பிச்சை எடுத்தால் தவறில்லை
எல்லாம் இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்!
சொற்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி
சொற்களின் சுரங்கம் நம் தமிழ்மொழி!
காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கற்கண்டு கவிதைகள் உள்ள மொழி!
உலகப்பொதுமறையை உலகிற்கு தந்த மொழி
உலகம் போற்றிடும் உன்னத தமிழ்மொழி!
ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு முதல்மொழி தமிழ்
அறியவில்லை புரியவில்லை நம் தமிழர்களுக்கு!
தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
தரணியில் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்!
தமிழைப் பிரிக்கும் சாதியும் மதமும் வேண்டாம்
தமிழரை இணைக்கும் தமிழ்மொழி வேண்டும்!
உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை
உலகத் தமிழர் யாவரும் தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் உடனே
தட்டிக் கேட்போம்! தோள் கொடுப்போம்!
ஒருநூறு ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் ஒன்று
ஓர் எச்சரிக்கை செய்துள்ளனர் ஆய்வாளர்கள்!
உலகின் முதல்மொழி தமிழைத் தமிழர்கள்
ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!
தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்டுவோம்
தமிழர்களோடு தமிழிலேயே உரையாடி மகிழ்வோம்!
குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்பிப்போம்
குழந்தைகள் வளர்ந்தபின்னே ஆங்கிலம் பயிலட்டும்!
ஏமாந்த காலம் முற்றுப் பெறட்டும்
ஏமாற்றமின்றி விழிப்புணர்வு பெற்றிடுவோம்!
மற்றவரின் ஒற்றுமையைக் கண்டு பாடம் கற்று
மண்ணில்உள்ள தமிழர்கள் ஒன்றிணைவோம்!
ஒரு கை தட்டினால் ஓசை வராது
ஒன்றுபடாமல் கத்தினால் யாருக்கும் கேட்காது!
தமிழ்மொழி காக்க ஒன்றுபடுவோம்!
தமிழஇனம் காக்க ஒன்றுபடுவோம்!
கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல தமிழன்
கொட்டிய கரத்தை முறிப்பவன்  தமிழன்!
எழுத்திலும் வடமொழி நஞ்சு கலந்து வருகின்றனர்
எழுத்துக் கலப்பிற்கும் முடிவு கட்டுவோம்!
தமிழைத் தமிழாக தமிழர்கள் எழுதிடுவோம்
தமிழைத் தமிழாக தமிழர்கள் பேசிடுவோம்!
உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும்!
முடிந்தமட்டும் நல்ல தமிழ் பேசுவோம்
முடிந்தமட்டும் நல்ல தமிழ் எழுதுவோம்
தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்
தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்!
‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
தரணிக்கு நாமக்கல் கவிஞர் வரிகளை பறைசாற்றிடுவோம்!
உலகஅளவில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தமிழர்கள்
உணர்ந்து தமிழ்வழி பயின்றதால் சாதித்துக் காட்டினார்கள்!
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உரைப்பது தமிழ்மொழி
உயிருக்காக இரங்கிட இரக்கம் காட்டுவது தமிழ்மொழி!
மனிதநேயத்தை மனதிற்கு கற்பிப்பது தமிழ்மொழி
மட்டற்ற இலக்கியத்தை தன்னில் கொண்ட்து தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாய் விளக்குவது தமிழ்மொழி
அய்ந்திணை இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி!
அறம் செய்ய விரும்பு என்று சொல்வது தமிழ்மொழி
அனைவரையும் நேசிக்க வைப்பது தமிழ்மொழி!
வீரத்தை போர்விதிகளை விளக்குவது தமிழ்மொழி
விவேகத்தை தன்னம்பிக்கையை விதைப்பது தமிழ்மொழி!
எல்லா மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
எல்லா மொழிகளின் மூலமொழி தமிழ்மொழி!
ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ்மொழி
ஆங்கிலேயரும் விரும்பிப் படித்த மொழி தமிழ்மொழி!
மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு
மதம் கடந்து மனிதம் கற்பிக்கும் மொழி தமிழ்மொழி!
உலகத்தமிழ் மாநாடுகள் கண்ட மொழி தமிழ்மொழி
உலகமெங்கும் ஒலிக்கும் உன்னத மொழி தமிழ்மொழி!
எண்ணிலடங்காத சிறப்புப் பெற்ற மொழி தமிழ்மொழி
எண்ணத்தை தூய்மைப்படுத்திடும் மொழி தமிழ்மொழி!
கலை பண்பாடு கற்பிக்கும் மொழி தமிழ்மொழி
கனியை விட சிறந்த இனிமை மொழி தமிழ்மொழி!
தமிழ்சொற்கள் இல்லாத பிறமொழிகள் இல்லை
தரணியில் உள்ள மொழிகளில் வள்ளல் தமிழ்மொழி!
படைப்பாளிகள் அனைவருக்கும் வேண்டுகோள்
படைப்பில் விழிப்புணர்வு விதைத்திடுங்கள்!
ஆண்டாண்டு காலமாக தூங்கியது போதும்
அனைவரும் உடனே விழித்து எழுவோம்!
ஏமாளி அல்ல தமிழன் என்று மெய்ப்பிப்போம்
எப்பாடுபட்டாவது நம் தமிழ்மொழி காத்திடுவோம்!
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
அளவிற்கு மிஞ்சிய தூக்கமும் கேடாகும்
தமிழா! தமிழா! தூங்கி  வழிந்தது போதும்
தமிழா! தமிழா! எழுந்து நில் எழுச்சி கொள்!

எழுந்து நிற்போம் எழுச்சி கொள்வோம்
எல்லோரும் ஒன்றிணைவோம் இன்பத்தமிழைக் காத்திடுவோம்!
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

புதன், 24 ஆகஸ்ட், 2016

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் ராணி வார இதழில் எழுதி வரும் வித்தியாசமான " கேள்வியும் நானே .. பதிலும் நானே . " தொடர் படித்து மகிழுங்கள்

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் ராணி வார இதழில் எழுதி வரும் வித்தியாசமான " கேள்வியும் நானே .. பதிலும் நானே . " தொடர் படித்து  மகிழுங்கள்.பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !

பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் !     கவிஞர் இரா .இரவி !

முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !

மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !

பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !

முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !

பனிரெண்டு ஆண்டுக்கு  ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !

ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !

'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !

'அழகே  அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான  கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !

இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !

'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண  வைத்த யுககவிஞன் !

'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !

தாயில்லாப்  பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !

'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !

காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !

'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !

குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !

ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில்  நடைப்பிணமாக்கினான் !

தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !

பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !

கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !

சாவே உனக்கு ஒரு சாவு வராதா  ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !

இறப்பே உனக்கு ஒரு இறப்பு  வராதா  ? என
ஏங்கித்  தவிக்கிறது எல்லோர் மனமும் !

பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும்  முற்றிலும் பொருந்தும் !

வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !

உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

மாணிக்கனார் நூற்றாண்டு விழா...சென்னை அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி !

மாணிக்கனார் நூற்றாண்டு விழா...சென்னை அழைப்பிதழ் !

தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு !

வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !

நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர் 
நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் !

வானிலிருந்து வரும் அமுதம் மழை என்றார் 
வஞ்சி நீ என்னை வாழ்விக்கும் அமுதம் என்பேன் !

மூன்று பக்கம் கடலால் சூழ்ந்தது இந்தியா 
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான் !

வான்மழை பொய்த்தால் பூமி வாடி வதங்கிவிடும் 
வடிவழகி உன் பார்வை பொய்த்தால் நான் வாடிடுவேன் !

மண்ணில் பயிர்கள் வளர்ந்திட வேண்டும் வான்மழை 
மண்ணில் நான் வாழ்ந்திட வேண்டும் உன் பார்வைமழை !

மழை பொய்த்தால் எங்கும்  வறட்சி வந்துவிடும் 
மங்கை நீ வராது பொய்த்தால் மனக்கவலை வந்துவிடும் !

நல்ல மழை பொழிந்தால் உள்ளவர்கள் மகிழ்வார்கள் 
நங்கை உன் பார்வை மழை பொழிந்தால் மகிழ்வேன் நான் !

மழை பெய்தால் நீர் நிலைகள் நிரம்பி வழியும் 
மங்கை நீ வந்தால் மகிழ்வில் பொங்கிடுவேன் நான் !

உழவர்கள் உயர்வாக எண்ணுவது வான்மழையை 
உன்னை உயரவாக என்றும் எண்ணுவது என்  நிலையே !

' மாமழை  போற்றுதும் 'என்பார்கள் இலக்கியத்தில் 
'மங்கை உன்னைப் போற்றுதும்' என்பேன் நான் !

கண்கள் இரண்டு போதாது  வான்மழை  ரசிக்க 
கண்கள் இரண்டு போதாது  கள்ளி உன்னை  ரசிக்க !

மழை பொழிந்திட மரங்கள் வளர்க்க வேண்டும் 
மங்கை நீ மகிழ்ந்திட அன்பை விதைக்க வேண்டும் !

வளம் செழிக்க பூமிக்குத் தேவை வான்மழை 
வஞ்சி நீ என்னை செழிக்க வைக்கும் பூமி மழை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

பெங்களூருவில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அனுமார் கோயில் படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அனுமார் கோயில் படங்கள் கவிஞர் இரா .இரவி !
8 மொழிகளில் வரும் உலகின் முன்னணி பிரதிலிபி இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய கட்டுரைகள் ,விரிவான நூல் மதிப்புரைகள் ,ஹைக்கூ கவிதைகள் ,புதுக்கவிதைகள் படித்து விட்டு உங்கள் கருத்தை பதியலாம் .


.8 மொழிகளில் வரும் உலகின் முன்னணி பிரதிலிபி இணையத்தில் கவிஞர் இரா .இரவி
 எழுதிய கட்டுரைகள் ,விரிவான நூல் மதிப்புரைகள் ,ஹைக்கூ கவிதைகள் ,
புதுக்கவிதைகள் படித்து விட்டு உங்கள் கருத்தை பதியலாம் .நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area