கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

era3.jpgகழிந்த நிமிஷங்களின் மௌனங்கள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி


அட்டைப்பட ஓவியம் மிக நன்று. நடவு வெளியீடாக வந்துள்ள இந்நூல் வடிவமைப்பு மின்னல் கலைக்கூடம். நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலேயே நிலா இருப்பதால், நிலாவைப் போல அழகான கவிதைகளை வடித்து உள்ளார். நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதுபோல் இந்நூல் கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை. நமக்குள் மலரும் நினைவுகளை தோற்றுவிக்கின்றது.

புதுக்கவிதை என்ற பெயரில்,நவீனம் என்ற பெயரில்,புரியாத புதிராக கவிதை எழுதி வருகின்றது ஒரு கூட்டம். அவர்களது கவிதைக்கு கோனார் உரை ஒன்று வெளியிட்டாலே வாசகருக்கு புரியும். ஆனால் இந்நூல் கவிதைகள்,வாசகருக்கு எளிதாக புரிகின்றது. கவிஞர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களை,உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார்.

நூலின் பெயர் "கழிந்த நிமிடங்களின் மௌனங்கள்" என்று இருந்திருந்தால் இன்னும் இனிமையாகின்றது. இந்த நூலைப் படித்திட கழிந்த நிமிடங்கள் பயனள்ளவையாகின்றது. அது தான் நூலின் வெற்றி. திரு.கே.எம்.நாச்சிமுத்து அவர்களின் அணிந்துரை நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. புலவர் த.மா.பொன்னுசாமி அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி,தன்னுரையில் குறிப்பிட்டது போல.

இயந்திரத் தனமான வாழ்க்கை சூழலிலிருந்து சற்றே விலகி. இளைப்பாறும் இடம்,இலக்கியம்,கவிதை, எழுத்து, இது தற்கால நிகழ்வு. இந்நூலை படிக்கும் போது கிடைக்கும் இதமே. இலக்கியத்தின் மேன்மையை உணர்த்தும்.

கவிதை எழுத வேண்டுமென்ற முடிவுடன், தனக்குத் தெரிந்த மொழிப் புலமையெல்லாம் பயன்படுத்தி, ஒப்பனைகள் செய்து எழுதவில்லை இவர். தனக்குத் தெரிந்த எளிமையான சொற்களால் மிக எளிமையாக பதிவு செய்துள்ளார். அது தான் நூலின் சிறப்பு. கவிதைகளுக்கு தலைப்பு எதுவும் தராதது வித்தியாசமாக உள்ளது. ரசிக்கும்படி உள்ளது. காதலியின் மௌனம் நமது மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கும் என்பதை உணர்த்தும் கவிதை வரிகள் இதோ!

மௌனத்தின் விளைவு

மௌனங்கள் பூகம்பத்தின் பேரழிவைக் காட்டிலும் கோரமானது
உலகையே ரணப்படுத்தி சந்ததிகளை சிதைக்கும்
அணுகுண்டை விட அபாயகரமானது
பெரும் விபத்தின் இழப்பை விட வலியானது.

கவிஞர் தன் வாழ்வில் நடந்த குழந்தைப் பருவத்து நினைவுகளை எல்லாம் கவிதையாக்கி இருக்கிறார். சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை.

நகரத்து வாழ்வில் இயந்திரமாகி விட்ட மனிதர்கள் பற்றிய கவிதை இதோ!

எதிர் வீட்டு வீடுகளில் வசித்தாலும்
சின்னதாய்க் கூட புன்னகைப்பதில்லை மனிதர்கள்.

உண்மையிலும் உண்மை நம்மல் பலர் எதிர் வீட்டுக்காரர்களுடன் இப்படித்தான் வாழ்கின்றோம். மனித வாழ்க்கை என்பது வரம். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்,அன்பு செலுத்தி பிறரை நேசித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கவிதை உள்ளது.மனிதன், மனிதநேயத்தை மெல்ல மெல்ல மறந்து விடுகிறான் என்பதைச் சுட்டும் கவிதை!

இல்லம் தேடி வரும் மனிதர்களை வரவேற்றுப் பேச
முடிவதில்லை நேசமாய்
பசித்த முகத்தோடு கையேந்தும் கிழவிக்கு
காசு போட மனமிரங்க முடிவதில்லை பலசமயம்
இயலாமையோடு பேருந்து ஏறும் சிலருக்கு
இருக்கையை பகிர்ந்து கொள்ள இடம் தருவதில்லை மனசு
சாலை விபத்தில் சிக்கியவருக்கு
நின்று உதவிட முடிவதில்லை எப்போதும்
குப்பை விஷயங்களை கோபுரமாக்கிக் கொண்டாடுகிறது
பொய்மை வாழ்க்கை

இக்கவிதையில் கடைசி வரியின் முடிப்பு முத்தாய்ப்பு. தொல்லைக்காட்சியாகி விட்ட,தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே,வந்தாரை வரவேற்று மகிழும் உயர்ந்த தமிழ்ப் பண்பாட்டை தொலைத்து விட்ட அவலத்தை உணர்த்தி மனிதநேயம் விதைக்கிறார்.கவிதைகளில் பேருந்து நடத்துனர் பணி மிகவும் சிரமமான ஒன்று. அதைக் கூட விட்டு வைக்காமல் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

அம்மாவை காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்து, வீட்டில் அம்மா சமைத்த உணவு சுவையாக இருக்கும் என்று வாய் அளக்கும் பலரின் கன்னத்தில் அறைவது போன்ற கவிதை உள்ளது. இன்றைய நவீன வாழ்வில் உள்ள முரண்பாடுகளை உணர்வுப் ப+ர்வமாக எளிய சொற்களால் இனிமையாக புதுக்கவிதை வடித்துள்ளார். கவிதைகளுக்கான நவீன ஓவியங்கள் கவிதையின் தரத்தை மேலும் உயர்த்திட துணை நிற்கின்றது. ஓவியர் மதியழகன் சுப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள்!

ஏழை வீடுகளில் குழந்தைகள் அடம் பிடித்து மண் உண்டியல் வாங்குவது வழக்கம். ஆனால் குடும்பப் பொருளாதார வறுமை காரணமாக அந்த உண்டியல் நிறையாது. இதனை உணர்த்தும் கவிதை.

நிறைய கனவுகளோடு
நிறையாத உண்டியலும்
நானும்

சோளத்தட்டையில் சுருட்டு செய்து, சிறுவயதில் பிடித்ததற்காக அடி வாங்கிய அண்ணன். இன்று தைரியமாக வீட்டிலேயே சிகரெட் பிடிக்கிறார் என்பதை நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி தம்பியாக இருந்து பாடி உள்ளார்.கடைசி வரியில் முத்திரை பதிக்கிறார்.

இப்பெல்லாம் அண்ணன் வீட்டிலேயே சிகரெட்டு பிடிக்கிறாரு
அம்மா திண்ணையோட இருக்கிறதனாலேயே

பல இல்லங்களில் பெற்றெடுத்த அம்மாவிற்கு இடம் தருவதில்லை. கருவறையில் இடம் தந்தவளுக்கு வீட்டின் ஒரு அறையில் இடம் தராமல்,முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. இன்னும் சில இல்லங்களில் வீட்டுத் திண்ணையைத் தாண்டி உள்ளே வரக்கூட அனுமதிப்பதில்லை என்ற அவலத்தை கவிதையின் மூலம் சுட்டுகிறார்.

மனிதநேயத்தை, பாசத்தை விதைக்கும் விதமாக, உள்ளத்து உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்துள்ள கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்திக்குப் பாராட்டுக்கள். பின் அட்டை மின்னல் போல பளிச்,கவிதைகள் நன்று!

கருத்துகள்