காகிதப் பூ தேனீக்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

z.jpgகாகிதப் பூ தேனீக்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் இமயம்.பா.ஜெயக்குமார்


காகிதப் பூவை நுகர்ந்து பார்த்த தேனீக்கள் ஏமாற்றம் அடையும். ஆனால் இந்த நூலை வாசித்த வாசகர்கள் ஏமாற்றம் அடைவதில்லை. இலக்கியத்தேன் சொட்டுகின்றது கவிதைகளில்.

என்னுரையில் நூல் ஆசிரியர் கவிஞர். இமயம் பா.ஜெயக்குமார் தாய் தந்தை மற்றும் வளர்த்த அத்தை என அத்துணை உறவுகளுக்கும் நன்றி சொல்லி மாமனிதர் அப்துல் கலாமை நினைவு கூர்ந்து தொடக்கமே சிறப்பாக உள்ளது. புலவர் செ.இராசு அவர்களின் அணிந்துரை அற்புத உரையாக உள்ளது. திரைப்பட பாடலாசிரியர் அந்தியூர் நடராஜன் வாழ்த்துரை முத்திரை பதிக்கின்றது.

முதல் கவிதையிலேயே கவிப் பேரரசே எனத் தொடங்கி வைரமுத்து அவர்களை பாராட்டிய கவிதையில் கவிதை முன்னோர்களை மதிக்கும் பண்பு வெளிப்படுகின்றது. தமிழ்த்தாயே கவிதை தரமாக உள்ளது. புஷ்பாஞ்சலி தொடங்கி சமர்ப்பணம் வரை நன்றி நவிழ்கின்றார்.

வரிவரியாக சீர் சீராக மரபுக் கவிதைகளில் சொல்ல வேண்டிய கருத்துக்களை சுண்டக் காய்ச்சிய பாலாக புதுக்கவிதையில் சுருங்கக் சொல்லி விளக்கி விடுகின்றார்.

கவிஞர்.

நிலாப் பெண்ணே

நீ நேசிப்பது யாரை

நித்தம் நித்தம் வந்து

பார்க்கிறாயே

என வித்தியாசமாக நிலவைப் பார்த்து கேள்வி கேட்கிறார்

ஈழத்தமிழர்கள் என்ற தலைப்பில் நமது உடல் பிறப்புகளான ஈழத்தமிழர்களின் இன்றையை துன்பத்தைச் சுட்டி உள்ளார்.

ஈழத்து தெருக்களில்

அமைதி என்னும்

இன்ப வெள்ளம் ஓடும்போதா?

என்ற கேள்வியில் ஈழத்தில் யுத்த மேகம் நீங்கி அமைதி நிலவ வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் ஆசையை உரக்கப் பதிவு செய்துள்ளார்.

“பணம் அன்மை முறிக்கும்” என்ற பொன்மொழி கேள்விப்பட்டு இருக்கிறோம்.இவர் வித்தியாசமாக பார்க்கிறார் பணத்தை

பணம் நட்பை

பிரிக்கும்

நரகா சூரன்

இப்படி பல்வேறு கவிதைகளால் நூலாசிரியர் கவிஞர் பா.ஜெயக்குமார் நம்மை சிந்திக்க வைக்கிறார். உடலால் மறைந்தாலும் உள்ளத்தை விட்டு மறையாத கல்பனா சாவ்லா தொடங்கி சுனிதா வில்லியம்ஸ் வரை “சாதனை மங்கையரே” என்ற தலைப்பிலான கவிதையில் புகழாரம் சூட்டி உள்ளார்.

காதலைப் பற்றி பாடாத கவிஞர் இல்லை காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை என்பதைப் போல இருவரும் காதலைப் பாடி உள்ளார்.

காதல் என்பது சிலருக்கு

சுழலும் கடிகாரமாய்

பலருக்கு

நின்று போன நிமிட முட்களாக

காதலில் பலர் தோற்று விடுவதை நன்கு பதிவு செய்துள்ளார். சின்னச் சின்ன

மின்னல்கள் போல சிந்தனைக் கீற்றை கவிதைகளாகப் பதிவு செய்துள்ளார்.

ஆர்ப்பரிப்பு

நான் ஆர்ப்பரிக்கும் அலையாய் இல்லாவிட்டாலும்

அமைதியா நகரும் நதியாய் இருப்பேன்

என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. மிகச்சிறந்த பேச்சாளர் எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். நதியைப் போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமென்று “ஒடும் நதியின் ஓசை” என்ற தன்னம்பிக்கைத் தொடரிலும் குறிப்பிட்டு இருந்தார். அவற்றை நினைவுப்படுத்தின.

இன்றைக்கு உலக முழுவதும் மதவெறியும் இனவெறியும் பிடித்து மனிதன் விலங்காக மாறி வருவதால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகின்றன. அதனைச் சுட்டிக்காட்டும் கவிதை

உன்னதம்

உயிரை விட உன்னதமானது

எதுவுமில்லை அன்று

இன்று உயிரைவிட

மலிவானது எதுவுமில்லை

இப்படி பல கவிதைகள் சொல்லிக் கொண்டே போகலாம் நூலை வாங்கி நீங்கள் படித்துச் சுவைக்க வேண்டும் மொத்தத்தில் அறிவு புகட்டும் நெறிப்படுத்தும் நல்ல பல கவிதைகளின் தொகுப்பு இது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்


கருத்துகள்