அரசுப்பணியில் இனிய நினைவுகள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

e.jpg
  • நூலின் பெயர் : அரசுப்பணியில் இனிய நினைவுகள்
  • நூல் ஆசரியர் : புதுமைக்கவிஞர் சி.பி. பொன்னுசாமி
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசரியர் புதுமைக் கவிஞர் திரு.சி.பி. பொன்னுசாமி அவர்கள், சுற்றுலாத் துறையில் அரசு துணைச் செயலராக, சிறப்புப் பணி அலுவலராக பணியாற்றி 31.08.2009 அன்று பணி ஒய்வு பெற்றுள்ளார். ஒய்வு பெற்ற நாளன்று இந்நூலை வெளியிட்டுள்ளார். வரலாற்று ஆவணமாக நூல் உள்ளது.

இந்நூலில், அவர் பணியாற்றிய போது சந்தித்த அனுபவங்களை வரலாற்று நூலாகப் பதிவு செய்துள்ளார். முதற்பகுதியாக அனுபவங்களும், நிறைவுப் பகுதியாக தான் சந்தித்த அறிஞர்கள், ஆற்றல் மிக்க அலுவலர்கள், ஓய்வு பெற்ற மூத்தோர், இனிய நண்பர்கள், அற்புத மனிதர்கள் ஆகியோரைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. வித்தியாசமான முயற்சி.

கவிதை எழுதும் ஆற்றல் காரணமாக,தலைமைச் செயலாளர் முதல் சாதாரண கடைநிலை ஊழியர் வரை வாழ்த்துப்பா எழுதும் வழக்கம் உள்ளவர். இவர் வாழ்த்துக் கவிதையைப் படித்து, திரு.வெ.இறையன்பு,இ.ஆ.ப.அவர்கள் பாரட்டியதன் காரணமாக, கவிஞராக இருந்தவர் எழுத்தாளராக உயர்ந்துள்ளார். இந்நூலில் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறை செயலர் திரு.வெ.இறையன்பு, இ.ஆ.ப. தொடங்கி, திரு.ஜி.தியாகராஜன் என்ற பதிவுரு எழுத்தர் வரை மறக்காமல் பதிவு செய்த நினைவாற்றல் பாராட்டுக்குரியது. நூல் ஆசரியர் திரு.சி.பி. பொன்னுசாமி அவர்கள் 1974-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ம் நாள் அரசுப் பணியில் இளநிலை உதவியாளராகச் சேர்ந்து கடின உழைப்பாற்றலின் காரணமாக சுற்றுலாத் துறையின் துணைச் செயலர் பதவி வரை பதிவு உயர்வு பெற்று ஒய்வு பெற்ற இவர், உழைத்தால் உயர்வு உறுதி என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார். 35 ஆண்டு கால அரசுப்பணியின் அற்புதமான பதிவு.

இவர் பணியில் சேர்ந்த போது சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் இணைச் செயலராக இருந்த திரு.சி.இராமச்சந்திரன் இ.ஆ.ப. தொடங்கி, இன்றைய தலைமைச் செயலர் வரை தான் சந்தித்த உயர் அதிகாரிகள் அனைவரைப் பற்றியும் நூலில் பதிவு செய்துள்ளார்.பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவத்தையும், சந்தித்த மனிதர்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களுடன் நூலாக வடித்து உள்ளார்.

இன்றைய இளைஞர்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்ற எழுத்தாளர், சிந்தனையாளர்,பேச்சாளர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்த காரணத்தால் அவருடன் பணியாற்றிய இனிய அனுபவத்தை மிகவும் சுவைபட எடுத்து இயம்பி உள்ளார். தலைமைச் செயலாளர் பேசுவதற்கு உரை எழுதிக் கொடுத்த ரகசியத்தைக் கூட மறைக்காமல் அப்படியே பதிவு செய்ததன் மூலம் இந்த நூலில் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை உணர முடிகின்றது.

உயர் அலுவலர்கள் மட்டுமின்றி, உதவி சுற்றுலா அலுவலராகப் பணிபுரியும் என்னைப் பற்றியும், சுற்றுலாத் துறை செயலர், இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், சுற்றுலா அலுவலர் என யாரையும் விட்டு வைக்காமல், அனைவரைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக எழுதி உள்ளார்.

தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டு பணி, செய்தி-சுற்றுலாத்துறையில் பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனத்தில் பணி, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் பணி இப்படி பல்வேறு துறைகளில் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினேன் என அவரது சொந்த அனுபவங்களை மிகவும் நேர்த்தியாக, படிப்பதற்கு சுவையாக எழுதி உள்ள தரத்திற்குப் பாராட்டுக்கள், இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரையும் பண்படுத்தும் விதமாக உள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள் எப்படி? பணியாற்ற வேண்டும் என்பதை விளக்கும் விதமாக அருமையாக எழுதி உள்ளார். 2006-2007ஆம் ஆண்டிருக்கான மைய அரசின் 3 விருதுகள் சுற்றுலாத் துறைக்கு கிடைத்தமைக்கு அனைத்துப் பணியாளர்களுக்கும், தன் கையொப்பமிட்ட பாராட்டு மடல் செயலர் திரு.இறையன்பு வழங்கியது நூலில் உள்ளது.

திரு.கே.அலாவுதீன் இ.ஆ.ப.அவர்களின் அனுபவத்தை நூலில் எழுதி உள்ளார்.1981-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி நேர்காணலின் போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் தந்த பதிலும் மிகவும் நுட்பமானது. இவர் நடக்க இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் பொறுப்பு அதிகாரியாக உள்ளவர்.

கேள்வி : அலாவுதீன், அற்புத விளக்கு உமது கையில் இருந்தால், அதில் இருந்து வெளிவரும் பூதத்திடம் கேட்கும் மூன்று வரங்களைக் கூறுக.

திரு.கே.அலாவுதீன் இ.ஆ.ப.அவர்கள் அளித்த பதில்.

1.உலகில் அமைதி நிலவ வேண்டும்
2.இந்தியா வளமிக்க நாடாக திகழ வேண்டும்
3.அலாவுதீனுக்கு அய்.ஏ.எஸ். வேண்டும்.

இவருடைய இந்த பதில் புத்திக்கூர்மையை வெளிக்காட்டுகின்றது. இந்த அரிய செய்தி இந்த நூலில் உள்ளது. பானை சோற்றுக்கு பதச் சோறு இது. இன்னும் பல சுவையான தகவல்கள் நூலில் ஏராளம் உள்ளது. தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பெரும்பாலான இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் குணங்களைப் பற்றி, மேன்மையைப் பற்றி மிக நுட்பமாக நூலில் வடித்து உள்ளார். இயந்திரமாக வாழாமல் இனிய இதயத்தோடு வாழ்ந்த அனுபவம் பதிவாகி உள்ளது.

பொதுவாக, அரசுப்பணியாளர்கள் எழுத்தில் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் நூலாசிரியர் எழுத்தில் கவனம் செலுத்த, திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் கூற்றுப்படி, இலக்கியத்தில் கவனம் செலுத்தி, நூலாக வடித்து எழுத்துலகில் தடம் பதித்து உள்ளார். பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் எழுத்திலிருந்து ஓய்வு பெறாமல் தாங்கள் அறிந்த அரசாணைகள் பற்றி அலுவலக நடைமுறைகள் பற்றி அரசுப் பணியாளர்களுக்கு பயன்படும் விதத்தில் தொடர்ந்து எழுதி நூலாக்க வேண்டும். சுற்றுலாத் துறையின் துணைச் செயலாளர் பதவியில் இருந்த போது எந்தவித செருக்குமின்றி மிக இனிமையாக எல்லோரிடமும் பழகும் இனிய மனிதர்.திரு.சி.பி. பொன்னுசாமி வாழ்க பல்லாண்டு.



கருத்துகள்