கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் - (நூல்விமர்சனம் - கவிஞர் இரா.இரவி)

கவிதைகள்
கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் - (நூல்விமர்சனம் - கவிஞர் இரா.இரவி)


ஆசிரியர் : கவிஞாயிறு தாராபாரதி


கவிஞாயிறு தாராபாரதியின் கம்பீரமான அட்டைப்படத்துடன் உலகத்தரமான நேர்த்தியான வடிவுடன் நூலைப் பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வண்ணம் அழகிய வடிவமைப்பு. நூலின் தொகுப்பாசிரியர் திரு.மலர்மகன், பதிப்பாசிரியர் திரு. இலக்கிய வீதி இனியவன், கவிஞாயிறு தாராபாரதி மணிவிழா நிறைவு வெளியீடாக மலர்ந்துள்ள மணியான நூல். தமிழ் ஆர்வலர்கள் கவிதை விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தமிழ் மண்ணில் நிலைத்திற்கும் என்ற தலைப்பில் முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அணிந்துரை அற்புதமாக உள்ளது. உவமைக் கவிஞர் சுரதாவின் "நிலா உலகும் பாரட்டும் எதிர்காலத்தில்" என்ற கவிதையும் மிக நன்று. கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் ஐஷ்வர்யன், இலக்கிய வீதி இனியவன், மலர்மகன் என பலரும் வாழ்த்துரை வழங்கி கவிஞாயிறு பற்றி பறைசாற்றியுள்ளனர். "வானம் திறக்கும் சூரிய வாசல்" என்ற தலைப்பில், கவிஞாயிறு தாராபாரதி எழுதியுள்ள தன்னுரையில் ஆரம்ப வரிகளில் "எட்டயபுரத்துக் கவிஞன், தன் எழுதுக்கோலில் விட்டு வைத்த மையின் மிச்சத்தை , என் எழுதுகோலில் நிரப்பிக் கொண்டு எழுதுகிறேன் "என்று தொடங்கிய அவரது கவிதை பயணம் உண்மையிலேயே மகாகவியின் உச்;சத்தைத் தொடுமளவிற்கு பல அரிய கவிதைகளை படைத்து இருக்கிறார் என்பது உண்மை.

இன்றைக்கு , புத்தகத் திருவிழாவில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் தன்னம்பிக்கை நூல்கள்.கோவையிலிருந்து தன்னம்பிக்கை என்ற மாத இதழ் வருகின்றது. இன்னும் பிரபல இதழ்கள் பல ஆபாசங்களை வெளியிட்டாலும் , வேறு வழியின்றி வாசகர்களின் பலத்த வரவேற்பின் காரணமாக, தன்னம்பிக்கை கட்டுரைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னோடி யார்? என்று பார்த்தால் கவிஞாயிறு தாராபாரதி என்றால் மிகையன்று. தனது வைர வரிகளில் தன்னம்பிக்கை விதை விதை விதைத்தவர் கவிஞாயிறு தாராபாரதி மரபுக்கவிதை என்னும் இனிக்கும் காலத்தால் அழியாத பொக்கிஷம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். கவிஞனாக வேண்டும் என்ற ஆசையுள்ளவர்கள் முதலில் இந்நூலைப் படியுங்கள். எப்படி கவிதை எழுத வேண்டுத் என்பதை புரிந்து கொள்ள முடியும். சொற்களின் களஞ்சியமாக உள்ளது. மகாகவி பாரதியைப் போலவே இவரும் தமிழை உயிராக நேசிக்கிறார் என்பதை உணர்த்தும் உன்னதக் கவிதைகள்.

கவரிமான் சாதி

"இனமானம் காத்து நிற்கும்
எழுவானச் சுடர்கள் : இந்தத்
தனித்தன்மைக் கவிஞர்" களைநான்
தலைமீது தாங்கிக் கொள்வேன்.

உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர், ஆத்திச்சூடி படைத்த அவ்வையார், சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ இவர்களை தலைமீது தாங்கிக் கொள்வேன் என்கிறர்ர் கவிஞாயிறு தாராபாரதி. தமிழ்ப்பற்று, தமிழ்மொழி மீது அளவற்ற அன்பு கொண்டு கவிதைகளை அருவியாக வழங்கி உள்ளார்.

எழுந்தால் கொடிமரம்
விழுந்தால் அடியுரம்
இதுதான் தமிழன் எனக்காட்டு

இப்படி தன்னம்பிக்கை விதை விதைக்கும் வைர வரிகள் நூலில் ஏராளம். மகாகவி பாரதியைப் போல இவரம் தேசியத்தைப் பாடி உள்ளார்.

பூமியின் அச்சு

மனிதா
பூட்டிய இதய வீட்டுச் சுவரில்
புன்னகை என்றொரு சன்னல் வை!
மூட்டிய நெருப்பு, மூச்சில் எதற்கு?
முகத்தில் தென்றலை உலவச் செய்!

இனிய முகத்துடன், புன்சிரிப்புடன் எப்போதும் மகிழ்ச்சியாக இரு என வலியுறுத்துகின்றார்.இரண்டே வரிகளின் மூலம் உலகப்புகழ் அடைந்தவர் கவிஞாயிறு தாராபாரதி.

வேலைகளல்ல வேள்விகளே!

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் - உன்
கைகளில் பூமி சுழன்று விடும்
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை
விழிவிழி உன்விழி நெருப்புவிழி உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி
எழுஎழு தோழா! உன் எழுச்சி இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி

இப்படி இந்த ஒரு கவிதை போதும் , கவிஞாயிறு தாராபாரதியின் கவித்திறமைக்குச் சான்றாகும். இந்நக் கவிதை படித்தால் மனம் சோர்ந்தவர்களுக்கும் தன்னம்பிக்கையும் , உற்சாகமும் பிறக்கும். மொத்தத்தில் இந்த நூல் தமிழுக்கு மகுடம்.

தமிழில் வழிபாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கவிதைக்கு , �கற்பூரத்தட்டுக்கு தமிழ் கற்றுத் தா� என தலைப்பு . உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் என்ற மனிதநேயத்தை வெட்டு ஒன்று , துண்டு இரண்டு என நெத்தியடியாக விளக்கும் கவிதை இதோ!

தமிழ்ச் சாதி

யாரடா கீழ்ச்சாதி எவனடா மேல்சாதி
எல்லோரும் ஒரு சாதி தான்
ஊரிலே , தெருவிலே உட்பகை இனியில்லை
ஒரு சாதி - தமிழ்ச்சாதி தான்

செந்தமிழா ஒரு வார்த்தை

செந்தமிழா ஒரு வார்த்தை
நில்லடா - உன்
சிந்தனையைப் புதுப்பித்துக்
கொள்ளடா
அணுப்பொறியியல்
உன் அறிவைத் தீட்டு - நீ
அறிவியலில்
உன் புகழை நீட்டு
கணிபொறியில்
புதுமைகளைக் கூட்டு - உன்
கைத்திறனை
உலகறியக் காட்டு - செந்தமிழா!

கவிஞாயிறு தாராபாரதி தொலைநோக்கு சிந்தைனையுடன் இணையதளத்தில் , செந்தமிழன் ஈடில்லா வளர்ச்சி காண்பான் என்பதை அறிந்து அன்றே அற்புதமாக கவிதை வடித்துள்ளார். அவர் உடலால் இந்த உலகை விட்டு மறைந்திட்ட போதும் , பாடலால் வாழ்கிறார். இன்னும்

கருத்துகள்