அய்க்கூ அடுக்குகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

c.jpg
அய்க்கூ அடுக்குகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : பழனி மைந்தன், மயில்மணி மைந்தன்

அரசியல் கூட்டணி என்பது அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கானது. கவிஞர்களான பழனி மைந்தன், மயில்மணி மைந்தன் கூட்டணி பொது நலத்திற்காக சமுதாய நலத்திற்காக சமுதாய அவலங்களை தனது சாட்டையடி ஹைக்கூகளால் தோலுரித்து சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் அருமையான படைப்பு. இரு கவிஞர்களின் பெயரிலும் மைந்தன் உள்ளது. ஒரு ஒற்றுமை இருவருமே தமி;ழ்த்தாயின் மைந்தர்கள். தமிழ் இன எழுச்சிக்காக பூபாளம் பாடும் கவிஞர்கள். ‘மூன்றுவரி முத்துக்கள்” என்பது முற்றிலும் பொருத்தம். கடலில் மூச்சடக்கி மூழ்கி எடுத்து உயர்ந்த முத்துப் போல சிந்தனையில் மூழ்கி வடித்தெடுத்த முத்துக்கள். இருவரில் எது எவர் ஹைக்கூ சிறப்பு என பிரித்துப் பார்க்கத் தேவை இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை என்பதைப் போல இருவரின் ஹைக்கூகளும் வாசகர்களின் உள்ளத்தில் இரண்டற கலந்து விடுகின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல சிலவற்றை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

இன்றைய காலத்திற்கேற்ற அருமையான ஹைக்கூகள்- பழனி மைந்தன் ஹைக்கூ

எரிக்காத என்னை

பேசியது பிளாஸ்டிக்

மாசுக் கட்டுப்பாடு

மொட்டையடித்தார்கள்

இறப்புக்குமுன்

வனம் அழிப்பு

விரிந்த வானம்

முகம் பார்க்கும்

வண்ணக்கடல்

அருகில் புல்

மேயாத ஆடு

தொலைந்த குட்டி

மயில்மணி மைந்தன் ஹைக்கூ – சிந்தனைச் சிறகடிக்கும் அற்புத ஹைக்கூகள்

சுத்தம் செய்தார்கள்

பிள்ளைப்பேறு அறை

கருச்சிதைவு

நிலவைக் காணோம்

நெற்றியில்

விதவை

அலைகிறார்கள்

பதவி பிடிக்க

புதுக்கட்சி உதயம்

பறக்கும் பட்டம்

பார்ப்பதற்கு அழகு

படித்த பட்டம்?

இப்படி வாசகர்களின் உள்ளத்தை கொள்ளையடிக்கும் ஹைக்கூக்கள் ஏராளம் உண்டு. தாராளமாக வாங்கிப் படிக்கலாம். நண்பர்களுக்கும் பரிசு அளிக்கலாம்.

கணினியுகத்தில் நீண்ட நெடிய கவிதைகளைப் படிக்க நேரமும், பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் இந்த மூன்று வரி முத்துக்களான ஹைக்கூ கவிதைகளை எல்லோரும் விரும்பிப் படிக்கின்றனர். ஹைக்கூ கவிதைகளுக்கு வயது வரம்பு இன்றி அனைத்துத் தரப்பினர்களிலும் வாசகர்கள் உண்டு. கவிதை ரசிகர்கள் என்ற சின்ன வட்டத்தையும் தாண்டி பரவலாக பலராலும் படிக்கப்படும் வடிவம்தான் ஹைக்கூ. முன்பு இரட்டை திரைப்பட இயக்குநர்கள் உண்டு. இரட்டை இசையமைப்பாளர்கள் உண்டு. இரட்டை நகைச்சுவை நடிகர்கள் உண்டு. இன்று இரட்டைக் கவிஞர்களாக வலம் வந்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்கள். கல்லில் தேவையற்ற பகுதியை நீக்கும்போது சிற்பம் பிறக்கின்றது. சொற்களில் தேவையற்றதை நீக்கும்போது ஹைக்கூ பிறக்கின்றது. நல்ல நூல், சிந்தனை விதைக்கும் அற்புத நூல். ஹைக்கூ கவிதைகள் இன்று முனைவர் பட்ட ஆய்விற்கும், பல்கலைக்கழக பாடத்திலும் இடம் பெற்று, இணைய தளங்களில் வெற்றிக் கொடி நாட்டி பல்வேறு வெற்றிகளையும், பரிமாணங்களையும் கண்டு வரும் கணினி யுகத்தில் இந்த இரட்டையரின் ஹைக்கூ வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும். மிகச் சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், பேச்சாளருமான திரு. இறையன்பு அவர்கள் சொல்வார்கள். ‘தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். நதியைப் போல நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்”. அதுபோல இந்த இரட்டைக் கவிஞர்கள் தொடர்ந்து சிந்தித்து இயங்கி நல்லபல நூல்களைத் தரவேண்டும். இதுதான் இலக்கியம். சமுதாயத்தை நெறிப்படுத்துவது செம்மைப்படுத்துவதுதான் உண்மையான இலக்கியம். நல்ல இலக்கியம் நல்கிய படைப்பாளிகளான இந்த இரட்டையர்களுக்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு. சிலர் இலக்கியம் என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களை சிற்றின்பங்களை எழுதி வாசகர்களுக்கு போதை ஏற்றி வருகின்றன. அதுபோன்ற போலி இலக்கியங்களைத் தவிர்த்து நல்ல இலக்கியங்கள் வளர்க்க படைப்பாளிகளும் வாசகர்களும் முன் வர வேண்டும்.

கருத்துகள்