பட்டுப் பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்

eraw.JPG
பட்டுப் பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் : நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் ஆ.வெண்ணிலா


நூலின் அட்டைப்பட ஒவியம் இயற்கைக் காட்சியோடு சிறப்பாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் ஆ.வெண்ணிலா அவர்கள் எழுதி பிரபல இதழ்களில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. சிறந்த கவிஞர் மட்டுமல்ல, சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது. ஹைக்கூ கவிதையை பரவலாக்குவதற்கு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் கவிஞர் மு. முருகேஷ் அவர்களின் வாழ்க்கைத்துணை மட்டுமல்ல, இலக்கியத் துணையாகவும் இருப்பவர்.


சின்னச் சின்ன சிறுகதைகள் 8, குறுநாவல் 1, இரண்டும் கலந்த கலவையாக நூல் உள்ளது. ஒவ்வொரு கதையும் நம்மை சிந்திக்க வைக்கின்றது. கணையாழி இதழில் பிரசுரமான முதல் சிறுகதையான “ பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் ‘ நூலின் பெயராகச் சூட்டி உள்ளார்கள். பெண்ணாய் பிறந்தவர்களுக்கு மாதவிலங்கு நேரங்களில் ஏற்படும் துன்பத்தை, இன்று நவீன நாப்கின்கள் வந்து விட்டன. அதற்கு முன்பு பெண்கள் அடைந்த துன்பங்கள் யாவற்றையும் சிறுகதையின் மூலம் உணர்த்துகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் வெண்ணிலா. ஆண்களுக்கு இதுபோன்ற துன்பங்கள் இல்லை, ஆனால் பெண்களின் நிலை உணர்ந்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்hத்துகின்றது. இயற்கை பெண்களுக்கு மிகப்பெரிய துன்பத்தைத் தந்துள்ளது என்பதை உணர்ந்து இரக்கப்பட வேண்டும் ஆண்கள்.


பெண்ணியம் பற்றி கவிதை, கதை எழுதி வரும் முன்னணிப் படைப்பாளி கவிஞர் அ.வெண்ணிலா. தெருக்குழாயில் சண்டையிட்டு, போராடி தண்ணீர் பிடிக்கும் தாய்க்கு, வீட்டிற்குள் தண்ணீர் வந்த நாளில் அடைந்த மகிழ்ச்சியை, “ நீர்க்கோலம் “ என்;ற கதையில் உணர்த்துகின்றார். அவரது மொழியிலேயே இதோ.


வீட்டிற்குள் தண்ணீர் வந்த நாள் அம்மாவிற்குள் அப்படி
ஒரு பரவசம் பால் பாயசம் செய்தாள், கேசரி கிண்டினாள்
பூiஐ இடம் போல் குழாய் போட்டிருந்த இடத்தைத் துடைத்து
மஞ்சள் குங்குமம் வைத்து கற்புரம் ஏற்றி ஏக அமர்க்களம் பண்ணினாள்.
நாள் முழுவதும் ஒவ்வொரு குடத்திற்;காய் அல்லாடிக்
கொண்டிருந்தவளுக்கு அரைமணி நேரத்திற்குள் எல்லாப்
பாத்திரங்களும் நிரம்பி விடவே விக்கித்தது நின்றாள்.

இப்படி உள்ளத்து உணர்வுகளை சிறுகதையின் மூலம் உணர்த்துகின்றார்.


“ நேற்றின் மழையில் “ என்ற சிறுகதையில் மழையை நம் கண் முன் காட்சிப்படுத்தி விடுகிறார். “ உதிரும் கனவு “ என்ற சிறுகதையில் பெண்கள் பிறந்ததிலிருந்து பூவும் பொட்டும் வைத்து வருகிறார்கள்.ஆனால் இடையில் வந்த கணவன் இறந்ததும்,பூவையும், பொட்டையும் பறித்து விதவைக்கோலம் கொடுக்கும் சமுதாயத்திற்கு சாட்டையடி தரும் விதமாக எழுதி உள்ளார். சிந்திக்க வைக்கும் சிறந்த சிறுகதை. வயதான ஆயாவே தாத்தா இறந்ததும், பூவும் பொட்டும் இழப்பதை நினைத்து வருந்துகிறார். இளம் பெண்ணின் வருத்தத்தை நினைத்துப் பாருங்கள்.


“ அந்த கணம் “ என்ற சிறுகதையில் கணவன் கோபத்தில், மனைவியை செத்துப் போ என கடுஞ்சொல் கூற, தற்கொலைக்கு முயற்சி செய்யும் பெண், தான் இல்லை என்றால், தன் இரண்டு மகள்கள் நிலை என்ன? என்று யோசித்து தற்கொலை எண்ணத்தைக் கைவிட, கனவு முடிந்து விழித்து விடுகிறாள். குடும்பம் என்றால் பல பிரச்சனைகள் உண்டு, அதற்கு தற்கொலை தீர்வு இல்லை, கணவன் கடுஞ்சொல் கூறக்கூடாது என்ற வாழ்வியல் நெறியையும் சிறுகதையின் மூலம் உணர்த்தி நூல் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார். படித்து முடித்ததும் நம் மனமும் கனமாகின்றது.


சிறுகதையின் மூலம் நம்மை சிந்திக்க வைக்கிறார். பகுத்தறிவும் விதைக்கிறார், மூட நம்பிக்கைகளைத் தகர்க்கின்றார். “ இருட்டும் வெளிச்சம் “ என்று சிறுகதையில், எழுத்தாளாரின் மனைவி தன் கணவனின் மேடைப் பேச்சைக் கேட்க சிறுகுழந்தையுடன் சென்று தான் பட்ட இன்னல்களை கதையாக்கி உள்ளார். “ இது கதை அல்ல நிஜம் “ கவிஞர் முருகேஷ், கவிஞர் வெண்ணிலா இருவரும் இணைந்து இலக்கிய விழா செல்லும் பழக்கம் உள்ளவர்கள். இருவரையும் மதுரை திருப்பரங்குன்றம் இலக்கிய விழாவில் நேரடியாக சந்தித்து இருக்கிறேன். எனவே கவிஞர் வெண்ணிலா தன் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் கதையாக வடித்து உள்ளார். அதனால் தான் இந்நூலை வாசிக்கும் போது நமக்கு கதையாகத் தெரியவில்லை. உண்மையிலேயே நிகழ்வுகளை பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது. புத்தகம் வாசிப்பது ஒரு சுகம். அந்த சுகத்தை உணர்த்திடும் நூல் இது.


ஆனால் இன்றைக்கு எழுத்தாளரையோ, பேச்சாளரையோ, கவிஞரையோ வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மதிப்பதே இல்லை. உலகமே அங்கீகரித்த போதும் இல்லத்தரசி அங்கீகரிக்கவில்லை என்ற கோபம் பலருக்கு உண்டு. ஆனால் கவிஞர் மு.முருகேஷ், கவிஞர் வெண்ணிலா இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். இலக்கிய இணையர்களாக வலம் வருபவர்கள். பல பேச்சாளர்கள் நான் பேசப் போகிறேன், கேட்க நீயும் வா என்று மனைவியை அழைத்து தோற்றுப் போனவர்கள் உண்டு.


“ பூமிக்குச் சற்று மேலே “ என்ற சிறுகதையில் மாற்றுத்திறனாளியின் உள்ளத்துக் குமறலை பதிவு செய்துள்ளார். கால் சற்று வீங்கி இருப்பதால் பட்ட துன்பத்தை உணர்த்துகின்றார். இப்படி நூல் முழுவதும் கதைகளில் வாழ்வியில் கருத்துக்களை பெண்களின் உள்ளக்குமறலை, மனித நேயத்தை வடித்து உள்ளார்கள். சிறிய நாவலும் சிறப்பாக உள்ளது.


“ விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும்
அதியசங்களில் நாம் தொட்டுப் பார்க்கக் கூடியது
மழை ஒன்று தானே “

உண்மை தான், விண்ணிலிருந்து வரும் இடியையோ, மின்னலையே தொட்டுப்பார்க்க முடியாது. மழையின் மகத்துவத்தை, மேன்மையை கதையில் உணர்த்துகின்றார்கள்.


சிறுகதை எப்படி? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்லும் நூலாக உள்ளது. வலிய ஆங்கிலச் சொற்கள் கலந்து எழுதும் எழுத்தாளர்கள் இந்த நூலைப் படித்துப் பார்த்து திருந்த வேண்டும்.

கருத்துகள்