நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காலக்கண்ணாடி

விலை ரூ 50
நூல் ஆசிரியர் கவிஞர் முத்துகிருஷ்ணா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் படையல் அன்னைக்கும் அன்னைத் தமிழுக்கும் என்று வழங்கி இருபது சிறப்பு .குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் பா .வேலம்மாள் ,திரு ஸ்ரீ தரன்    ஆகியோரது அணிந்துரை நூலுக்கு அழகுரையாக உள்ளது .

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்கிறோம் .விண்வெளிக்கு ஏவுகணைகள் ஏவுகின்றோம்.ஆனால்  இந்தியாவின் வறுமை மட்டும் இன்னும் ஒழிந்த பாடில்லை .அதனை உணர்த்தும் முதல் கவிதை   !

எழுதவும் முடியாமல் எதுவும் படிக்கவும் முடியாமல்
எந்த ஒரு வெளிச்சமுமில்லாமல்
ஏழை வீட்டின் மின் விளக்காய்
மங்கலாக எரிந்து கொண்டு   இருக்கிறது
நவீன விடியல் காலம் வந்த பின்னும்
வெளிச்சம் இன்னும் கிடைக்கவில்லை
ஏழைகளின் கூரை  கோபுரமாகும் போது
இந்நிலை மாறுமென்று நம்பிக்கையிலே
மங்கலாக விட்டில் போல்
மின்னிக் கொண்டிருக்கிறது  
ஏழை வசிக்கும்  கூரை வீடெங்கும்.

இந்தக் கவிதையை படிக்கும் போது இந்தியாவில் உள்ள கோடான கோடி குடிசைகள் நம் மனக் கண் முன் வருகின்றன .
நகரத்து வாழ்க்கையை மூன்று வரிகளில் முத்தாய்ப்பாக  வழங்கி உள்ளார் .

நகரம்

கையில் காசு கரைந்ததும்
கழுத்தை நேரிக்குது
நகரம்

அடுத்த பதிப்பில் மேல உள்ள தலைப்பை  நீக்கி விடுங்கள் .நீக்கினால் நல்ல ஹைக்கூ .

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .

கருப்போ சிவப்போ எந்த நிறத்திலும்
எவரும் பிறக்கலாம் .
நிறத்தையும்  குணத்தையும் அடிக்கடி மாற்றும்
பச்சோந்தியாக  மாறாமல்
மனிதனாக இருந்தால் சரிதான்!

நம் நாட்டில் கோடிகளை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் பற்றி பேசுகின்றனர் .ஆனால் தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி பற்றியோ ,பெரியாறு   பற்றியோ பேசுவது இல்லை .அதனைச் சுட்டுகிறார் .நூல் ஆசிரியர் கவிஞர் முத்துகிருஷ்ணா.

உப்பு சப்பிலாத பல விஷயங்களை
காரசாரமாய்  விவாதிக்கின்றோம் .
காரசாரத்துடன் விவாதிக்க வேண்டிய
சில விஷயங்களை ஏனோ விட்டு விடுகின்றோம்
உப்புக்குக் கூட பிரயோசனம் இல்லை என்று !

இந்த வரிகளை ஊடகத்தினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

நானே பெரியவன் என்ற அகந்தை அழித்துவிடும் .என்ற கருத்தை மிக எளிமையான உவமை மூலம் உணர்த்திடும் கவித்திறன் மிக நன்று .

தீக்குச்சி

தலைக்கனம் கொண்டதால்
வாழ்ந்திடாமல் எரிந்து சாம்பலானது . 
தீக்குச்சி

இதிலும் தலைப்பை எடுத்து விட்டால் சிறந்த    ஹைக்கூ ஆகி விடும் .

வீட்டில் பலர் பெருமைகைக்காக நாய் வளர்க்கின்றனர் .அனால் நாயிடம் உள்ள நல்ல குணத்தை நாய் வளர்ப்பவர்கள் வளர்த்து க்கொள்வதில்லை     
அதனை உணர்த்தும் கவிதை !

நன்றி
எதனை நாய்கள் அவன் வளர்த்தாலும்
அவனுக்கு ஏற்படவில்லை நன்றி உணர்வு !

காலக்கண்ணாடி என்ற நூல் தலைப்புக்கு  ஏற்றபடி காலத்தின் கண்ணாடியாகவே உள்ளது .பாராட்டுக்கள் .     
நூல் ஆசிரியர் கவிஞர் முத்துகிருஷ்ணா  வாழ்வில் கண்ட கேட்ட நிகழ்வுகளை புதுக்கவிதைகளாக வடித்துள்ளார். உள்ளத்து உணர்வுகளை கவியாக்கி உள்ளார் .இது இரண்டாவது நூல் .தொடர்ந்து எழுதி நூல்கள் பல வெளியிட வாழ்த்துகின்றேன் .
அடுத்த   பதிப்பில் அட்டைப்படத்தில் கவனம் செலுத்தி ,நல்ல வண்ணத்தில் அச்சிடுங்கள்.    
--

கருத்துகள்