பூமித் தாய்க்கு ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பூமித் தாய்க்கு ஆசை !



நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம் !

அலைபேசி 9940014963.

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி !

அனுசுயா பதிப்பகம் ,4. புலவர் ஜெகனாதன் தெரு ,பசும்பொன் நகர் ,பம்மல் ,சென்னை .75. விலை ரூபாய் 50.


நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம் அவர்கள் நல்ல மனதிற்கு சொந்தக்காரர் .புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர் .கவிதை உறவு உள்ளிட்ட  பல்வேறு இலக்கிய இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .சமீபத்தில் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழா உள்பட சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தன்னை இணைத்து இயங்கி வருபவர் .இந்த நூலிற்கு டாக்டர் மு .இராஜேந்திரன் இ .ஆ .ப . அவர்கள் எழுதியுள்ள ஆய்வுரை மிக நன்று .எழுத்தாளர் லேனா தமிழ் வாணன் அவர்களின் அணிந்துரை நன்று .கவிதை பற்றி கவிதை ஒன்று எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம்..மிக நன்று .இதோ .

கவிதைகளைப் படியுங்கள் - அது 
காலத்தை மாற்றும் சக்தி வாய்ந்தது !

கவிதைகளை மனதில் வையுங்கள் -அது 
உங்கள் மனக் கவலையை மாற்றும் மாமருந்து !

கவிதைகளைப் படையிலிடுங்கள் - அது 
லட்சியக் கனவுகளை நனவாக்கும் மந்திரம் !
.
இலக்கியம் குறிப்பாக கவிதை   இதயத்தை இதமாக்கும் என்பதை நூலின் தன்னுரையிலேயே உணர்த்தி உள்ளார் .

தோல்வி நாம் வேண்டா விருந்தாளி !
அதற்கும் கொஞ்சம்  விருந்தாளி !

அனுபவம்  என்பதை அள்ளிக் கொள் !
ஆற்றல் திசைகள் வாழ்த்த வெற்றிக் கொள் !

 தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை நன்று . 

உலகம் வணக்கும் தேசப்பிதா !

கொண்ட 
கொள்கைக்காய் !
உன்னையே 
தியாகம் செய்தாய் !
அதனால்தான் 
மரித்த பின்னும் 
வாழ்கின்றாய் !
மகாத்மாவாய் !

அண்ணல் காந்தியடிகள் பற்றிய கவிதை நன்று .பிறருக்காக வாழ்ந்த மாமனிதர்களுக்கு இறப்பு என்பது என்றும் இல்லை .இறந்தும் மக்கள் மனங்களில்  வாழ்வது உண்மை .இந்த நூலில் மரபுக்கவிதை புதுக் கவிதை இரண்டும் உள்ளன .கவிதையின் வடிவத்தை விட உள்ளடக்கமே கவிதையின் வெற்றியை முடிவு செய்கின்றன . கருத்தாழம் மிக்க  உள்ளடக்கம் மிக்க கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன .பாராட்டுக்கள் .

எறும்பு !

எறும்பு என்று 
யாரும் 
எள்ளி நகையாடாதீர்கள் !
யானை  கூட   இதற்கு 
பயந்துதான் -  காதை 
ஆட்டிக் கொண்டே இருக்கிறது ! 

உருவத்தை வைத்து யாரையும் எளிதாக எண்ணுவது தவறு என்பதை உணர்த்தும் கவிதை .உருவத்தில் பெரிய யானையும் உருவத்தில் சிறிய எறும்புக்குப் பயந்து    காதை ஆட்டும் நிகழ்வை நமக்குக் காட்சிப் படுத்தி ,எல்லோரையும் மதிக்க  வேண்டும் என்று உணர்த்தும் கவிதை நன்று . 

நல்லொளி பிறக்கட்டும் !

பிறர் குறையை தினமும் பட்டியல் போட்டோம் !
நம் குறையை எப்படியோ மறந்து நின்றோம் !

உபதேசம் நிறையவே ஊருக்கு சொன்னோம் !
நமக்குள்ளே எனும்போது ஒதுங்கி நின்றோம் !

ஆட்காட்டி விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும்போது மற்ற மூன்று விரல்களும் நம்மைதான் காட்டுகின்றன .என்று அறிஞர் அண்ணா சொன்னது நினைவிற்கு வந்தது .ஒன்றை படிக்கும்போது அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வர வேண்டும் .அதுதான் படைப்பாளி வெற்றி .ஊருக்கு அறிவுரை வழங்கி விட்டு தான் கடைபிடிக்காத வாய்ச் சொல் வீரர்களின் மனசாட்சியை தட்டிக் கேட்கும் கவிதை நன்று  .

பண்பு !

பண்பு அது இருந்தால் 
வாழ்க்கையில் வராது 
என்றும் வம்பு !
இதை நீ நம்பு !
உனக்குள் 
எழும் தெம்பு !

பண்பு பற்றிய பண்பான கவிதை நன்று .

பாரத தீயே பாரதியே !
பூமிக்குக் கிடைத்த
புதிய அத்தியாயமே !
சீரியலில் சிதைந்த 
என் தமிழருக்கு 
செல்போனில் செல்லரித்த 
இந்த தேசத்திற்கும் 
உன் கவிதையைத்தான் 
பதியமிடப் போகிறோம் !  

உடலால் உலகை விட்டு மறைந்தபோதும் பாடலால் நிலைத்து வாழும் மகாகவி பாரதி பற்றிய கவிதை நன்று .தொலைக்காட்சித் தொடரில் தொலைந்து விட்டு தமிழரை ,அலைபேசிக்கு அடிமையாகி விட்ட தமிழரை மீட்டு எடுக்க வேண்டிய அவசியம் உணர்த்தியது சிறப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்