“நூலின்றி அமையாது உலகு” தொகுப்பாசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 “நூலின்றி அமையாது உலகு”


தொகுப்பாசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இராரவி
வானதி பதிப்பகம்23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
பக்கங்கள் : 244, விலை : ரூ. 150.
*****
நீரின்றி அமையாது உலகு’ எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ‘நூலின்றி அமையாது உலகு’ என்பதும்.  நூலின் தலைப்பே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மாதம் ஒரு நூல் எழுதி வருகிறார்கள்.  ஓய்வுக்கு ஓய்வு தந்து தொடர்ந்து தேனீயைப் போல் இயங்கி வருகிறார்கள்.
தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்.  புத்தகம் தொடர்பாக பலர் எழுதிய கட்டுரைகளை தேடிப்பிடித்து படித்து தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்கள்.  புத்தகம் தொடர்பாக பலர் எழுதியதை படித்து இருக்கிறோம். படித்துவிட்டு அப்படியே அதனை மறந்து விடுவோம்.  ஆனால் இந்த நூல் புத்தகத்தின் பெருமையை பறைசாற்றிடும் ஆகச் சிறந்த நூல் என்றே சொல்ல்லாம்.  புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த நூல் படித்தால் புத்தகம் மீது காதல் பிறக்கும்.  வாசிப்பு வசமாகும். 
கூட்டணி நன்றாக இருந்தால் வெற்றிகள் குவியும். தமிழ்த்தேனீ இரா. மோகன், வானதி இராமனாதன் கூட்டணி நன்றாக அமைந்ததால் வெற்றியின் காரணமாக தொடர்ந்து நூல்கள் வந்த வண்ணம் உள்ளன.  மிக நேர்த்தியாக தரமாக அச்சிட்டு வழங்கி வருவதால் இலக்கிய உலகம் வாங்கி மகிழும் என்பது உறுதி. 
நூலில் பலரது கட்டுரைகள் இருந்தாலும், குறிப்பாக சில மட்டும்,
பதச்சோறாக உங்கள் பார்வைக்கு.
“என்னைக் கவர்ந்த புத்தகங்கள்” டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கருத்து : “புத்தகங்கள் எப்போதும் என் தோழர்கள், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவை எனக்குக் கனவுகளைக் கொடுத்துள்ளன.  தோல்வி நேரங்களில் அவை எனக்குத் துணிச்சலைக் கொடுத்துள்ளன
இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின் “நல்ல நூல்” கட்டுரையில் இருந்து சில துளிகள் :பண்புடையாரின் தொடர்பை விட, உயர்ந்த 
நூல்பயிற்சி மிக்க நன்மை தருவதாகும்.
திரு. ம.ரா.போ. குருசாமி அவர்களின் “ஒரு தீவில் நானும் சில புத்தகங்களும்” கட்டுரையில் :  “பொது நூல்கள் எத்தனைதான் இருந்தாலும் அவரவர் மனப்பாங்குக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் தனித்தனி நூல் தொகுப்புக்களை ஒவ்வொருவரும் வைத்துக் கொள்வது நல்லது”.  உண்மை தான். வீடு கட்டும் போது வரவேற்பறை, படுக்கையறை, பூஜையறை, சமையலறை, கழிவறை என்று திட்டமிடும் போது இனி நூலக அறை என்றும் ஒதுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளார்.
திரு. அ. சீனிவாசன் எழுதிய, “என்னைக் கவர்ந்த நூல்கள்” கட்டுரையில் சிறு துளிகள் :  “சுவை நிரம்பிய கதை, அருமையான நாடகப்பாங்கு, ஆழ்ந்த தத்துவ ஞானம், மெய்யுணர்வு இவை எல்லாம் ஒருங்கே கலந்த காவிய உலகம் கம்பனுடைய உலகம்”
சாகிதய அகதெமி விருது பெற்ற திரு. இல.சே. கந்தசாமி அவர்கள் எழுதிய, “நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்” :  “சில நூல்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள்.  சிந்தியுங்கள். செயல்படுங்கள்”.  
புத்தகங்களைத் தேடி அலைந்த போது ரோஜா முத்தையா, “சென்னை மூர் மார்க்கெட் ஒரு புண்ணிய ஸ்தலம்.  எத்தனை தடவை இந்த ஸ்தலத்துக்க்கு யாத்திரை போய் வந்தாலும் அலுப்போ, சலிப்போ தோன்றுவதில்லை.  எவ்வளவு பணத்தை இழந்துவிட்டு வந்தாலும் வருத்தம் தோன்றுவதில்லை.  கையில் கொள்ளை கொள்ளையாகப் புத்தகங்களாக குவித்து விடக் கூடிய காலமாக இருந்தது முன்பு”.
முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் கட்டுரையில்,
“இதயமே இல்லாத சமூகத்தின் இதயம் எதுவென்றால் புத்தகம்.  அதுதான் உலகத்திலேயே இல்லாத புதுமைகளையெல்லாம் நிகழ்த்திக் காட்டும்”.
தொகுப்பாசிரியர், நூலாசிரியர், தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும், அவருடைய இலக்கிய இணை தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும், நானும், நீதியரசர் எம். கற்பகவினாயகம் அவர்கள் மதுரை வந்த போது, அரசினர் விடுதியில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம்.  அவரது கட்டுரை படித்தவுடன் மலரும் நினைவுகளாக மலர்ந்தது அவரது நினைவுகள்.
படியுங்கள், படியுங்கள், படித்துக் கொண்டே இருங்கள் – நீதியரசர் எம். கற்பக வினாயகம்.
“ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு.  இது ஆன்மிகம் சொல்லுகிற உண்மை.  அறிவியலும் சொல்லுகிற உண்மை.  அந்த விளைவு தாமதமாகலாம்.  ஆனால் அந்த விளைவு தாமதமாகிறபோது வட்டி போட்டு வந்து சேரும்.  படியுங்கள்.  மற்றவர்களைப் படிக்க வையுங்கள்”.
பணம் எல்லோருக்கும் மனம் இருப்பதில்லை.  வெகு சிலருக்குத்தான் பணமும் நல்ல மனமும் இருக்கும். நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள், வருமானத்தில் ஒரு பகுதியை இலக்கியத்திற்கென செலவழித்து வரும் நல்ல மனதிற்கு சொந்தக்காரர்.  அவர் கட்டுரை “நூல்களின் துணை”!
“புத்தகங்கள் பொழுது போக்க உதவும் நண்பர்கள் மட்டுமல்ல, நல்லறிவு புகட்டும் ஆசான்கள், வழிகாட்டிகள் என்பது சிறுவயதிலேயே நான் கற்றுக்கொண்ட பாடம்”.
எழுத்து, பேச்சு, நிர்வாகம் மூன்று துறையிலும் முத்திரை பதித்துவரும் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் “உயிருள்ள தோழர்கள்” கட்டுரையில் இருந்து, “புத்தகங்களைப் பொறுத்தவரையில் அவை உயிருள்ள ஒரு தோழன், இதயத்துடிப்புள்ள இன்னொரு உயிர், புத்தகம் என்பது நாம் துளிர் விடுகின்ற வாய்ப்புகளை எற்படுத்திக் கொடுக்கிறது.
இப்படி நூலில் உள்ளவற்றை எல்லாம் எழுதிக்கொண்டே போக ஆசை தான்.  நூல் விமர்சனத்தில் அனைத்தையும் எழுதுவது முறையன்று. 
கட்டுரைகள் மட்டுமல்ல, புத்தகம் தொடர்பான கவிதைகளும் உள்ளன.  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், வைரமுத்து, நெல்லை ஜெயந்தா ,தங்கம் மூர்த்தி, இந்த வரிசையில் இரா. இரவி-யான என் கவிதையும் இடம் பெற்றுள்ளது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த நூல் முழுவதும் நூல்கள் பற்றியே உள்ளது.  இந்த நூல் படித்தால் நூல் மீது பற்று இல்லாதவர்களுக்கும் பற்று பிறக்கும்.  நூல் முழுவதும் நூல் தவிர வேறில்லை.  இந்த உலகம் இவ்வளவு நாகரீகம் வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் என அனைத்திற்கும் விதையாக இருந்த்து நூல் தான். 
ஈடு இணையற்ற நூலின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வண்ணம் தொகுப்பாசிரியர், நூலாசிரியர், தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது.  பாராட்டுக்கள்.
தொகுப்பாசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் கடின உழைப்பைக் கண்டு  வியந்து போகிறேன். எழுத்து ,பேச்சு இரண்டு துறையிலும் தனி முத்திரைப்  பதித்து வருகிறார்கள் .இது வெகு சிலரக்கு மட்டும் வாய்த்திட்ட வரம். இவர் உணவு இல்லாமல்  கூட ஒரு நாள் இருந்து விடுவார் .ஆனால் . ஒரு நாளும் நூல் வாசிக்காமல் இருக்க மாட்டார்கள்.  வாசிப்பை சுவாசம் போல நடத்துபவர் .நாமும் புத்தக வாசிப்பிற்கு என்று சில மணி நேரம் ஒதிக்கினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பபதை உணர்த்திடும்
 உன்னத நூல் . 



கருத்துகள்