‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை.


‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை. செல்.: 98424 36640
தொடர்பு முகவரி :  எஸ்2, வரதாடீலக், ‘வசுதாரா’, ஆண்டாள்புரம், மதுரை-3.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

அன்பு நிறைந்த கவிஞர்க்கு, நல்ல நூல்களை விரும்பிப் பயில்வதோடு நிற்காமல், அவற்றை நாடறியச் செய்யும் தங்களின் நன்முயற்சிக்கு என் வணக்கம்.
‘புத்தகம் போற்றுதும்’ எனும் தங்களின் ஒரு நூல் மூலம் தாங்கள் படித்துப் பயன் கொண்ட ஐம்பது நூல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று தமிழில் ஒருவரால் படிக்க இயலாது.  ஆர்வம் ஓங்க வாங்கி வைத்து, வீட்டு நூலகத்தில் படிக்க நேரமின்றித் தூங்கிக் கொண்டிருக்கும் நூல்கள் எத்தனையோ! நம்மில் பலருக்கும் பொதுவான அனுபவம் இது.  இதையும் மீறி எதையும் விடாமல் படிக்கும் ‘நெட்டைப் புத்தக வெறியர்க்கும்’ கிட்டாத நூல்கள் உண்டு.  அப்படிப் படிக்காமல் விட்ட குறை, தொட்ட குறையைத் தீர்த்துவைப்பது தங்களின் நூல்.
எவ்வளவு படித்தாலும் சாரமாக மனத்தில் தங்குவது கொஞ்சமே.  அந்தச் சாரத்தைப் பிழிசாறாகத் தரும் பணியைத் தங்கள் நூல் செப்பமுறச் செய்திருக்கிறது.  ‘ஹைகூ’ கவிஞரான நீங்கள் புதிய வரவாக உள்ள நூல்களையே அறிமுகம் செய்திருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பையும் மீறி, தங்கள் பட்டியலில் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரும், மூதறிஞர் ‘மராபோ’ போன்றவர்களும் இடம் பெற்றிருப்பது தங்களின் விசாலப் பார்வைக்குக் கட்டியம் கூறுகிறது.
‘வாசிக்கப் புதுசு’, ‘புது(த்)தகம்’ என்பவற்றின் பொருளுணர்ச்சியைத் தாண்டி, என்றும் புலராது அன்றன்று புதுமையாகவுள்ள காலத்தால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்த பழைய நூல்களின் திறன் தெளிந்தும் போற்றியிருக்கிறீர்கள்.  இந்தப் போற்றுதலுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.
“புத்தகம் போற்றுதும் ; புத்தகம் போற்றுதும் ;
       வித்தக ‘ஹைகூ’ கவிஞர் இரவிசெய்
       புத்தகம் போலிருந்த லான்”

.

கருத்துகள்