கணினியுகத்திற்குக் கம்பர் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை முது முனைவர் வெ இறையன்பு இ .ஆ .ப .

கணினியுகத்திற்குக்  கம்பர் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை முது முனைவர் வெ இறையன்பு இ .ஆ .ப . 




மனங்களில் மகரந்தச் சேர்க்கை
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
*****
பேராசிரியர் மோகன், வாக்கில் வலிமையும், எழுத்தில் எளிமையும் ஒருசேர அமையப் பெற்ற ஒருசில தகைசான்ற பேச்சாளர்களில் ஒருவர்.  இயங்கிக் கொண்டே இருப்பது அவரது இயல்பு.  அவர் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் கணினி யுகத்திற்குக் கம்பர் என்கிற நூலாக வெளிவந்திருக்கிறது.
இலக்கியத்தை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது தான் அதுகுறித்த உயரிய மதிப்பீடாக இருக்க முடியும்.  அந்த வகையில் கம்பரை எப்படி நம் காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது என்பதை இந்த நூல் பேசுகிறது.
இன்று தொடர்பியல் திறன்கள் வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாக வழிமொழியப்படுகிறது.  கம்பர் ஒருவர் எவ்வாறு சிறந்த தகவல் தொடர்பாளராக விளங்க முடியும் என்பதை அவருடைய காப்பியத்தில் பூடகமாகச் சொல்லிச் செல்கிறார்.  மந்தரையை, மலரையும் முள்ளாக மாற்றுவது எப்படி என்கிற விதத்திலும், சுமித்திரை, சத்துருகணன் ஆகிய இருவரையும் கேட்பவர்கள் கண்ணீர் சிந்தும் அளவு ஒரே ஒரு இடத்தில் பேசினாலும், எப்படி அழுத்தம் திருத்தமாக பேசுவது என்பதற்கு கம்பர் கோடிட்டுக் காட்டுகிறார்.
அனுமன் ஒருவர் எவ்வாறு புதியவர்களை அணுக வேண்டும்.  எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  எப்படி நம்பிக்கையூட்ட வேண்டும் என்பதற்கெல்லாம் சான்றாக இருக்கிறார்.  ஒரு தலைமைப் பண்பாளர் தனியாக விடப்பட்டாலும் ஆற்றல் மிகுந்த ஒருவராகத் தம்மை ஆக்கிக் கொள்வது எப்படி என்பதற்கு ராமன் உதாரணம்.  சுருக்கத்தையும் எவ்வாறு கடைப்பிடிக்கிறார் என்பதைத் தகுந்த உதாரணங்களோடு விளக்கி இருக்கிறார்.  இன்று மேடையில் பேச விரும்புகிறவர்கள் அவருடைய கம்பனில் நா நலம் என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள செய்திகளை வாசித்தால் அவர்களை செதுக்கிக் கொள்ள முடியும்.
இன்றும் கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்கள் எப்படிப் பொருந்துகின்றன என்பதை அவர் ஆய்வு செய்து வெளிப்படுத்தியிருக்கிறார்.  உலக அமைதி, போரற்ற சூழல். நோயற்ற வாழ்வு, ஒழுக்கத்துடன் கூடிய இன்பம், உலக சகோதரத்துவம், உணர்ச்சி மேலாண்மை, பொதுவுடைமைச் சமுதாயம் போன்ற கருத்துக்கள் கம்பரின் எழுத்து முழுவதும் விரவிக் கிடப்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.  இந்த நோக்கத்தில் நாம் இன்னும் கம்பரைப் பார்க்கவில்லையே என்ற எண்ணத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது.
தோரண வாயில் தொட்டு இறுதிச் சொல்லை முற்றுப்புள்ளி முத்தமிடும் வரை எண்ணற்ற மேற்கோள்களின் மூலம் பேராசிரியரின் படிப்புலகம் நமக்குப் புலப்படுகிறது.  அவருடைய வாசிப்பு சங்க இலக்கியங்களிலிருந்து சமகாலத்துக் கவிதைகள் வரை பரந்து விரிந்திருப்பதை அவருடைய எல்லா  நூல்களும் தெரியப்படுத்தினாலும் இந்நூலில் அது உச்சத்தை எட்டியிருக்கிறது.  பல ஆங்கில அருஞ்சொற்களுக்குக் கலைச் சொற்களை உருவாக்கும் உன்னத முயற்சியையும் இதில் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
அறக்கட்டளைச் சொற்பொழிவு என்பது அரைத்த மாவையே அரைக்காமல் புதிய சிறகுகளைப் போர்த்திக் கொண்டு வானவீதிக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.  நம்மை அசைபோட வைத்து நமக்குள் புதிய பூக்கள் மலர உதவ வேண்டும்.  சொற்பொழிவு என்பது செயற்கைக் கருவூட்டமாக நடக்காமல், அயல் மகரந்தச் சேர்க்கையாக நிகழ பேச்சாளர் வண்ணத்துப் பூச்சியாய் வலம் வர வேண்டும்.  அந்தப் பணியை பேராசிரியர் மோகன் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பதற்கு அடையாளச் சின்னமே இந்த அழகான நூல்.
.

கருத்துகள்