மதுரைச் சீமை நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களும் ! நூல் ஆசிரியர் : முனைவர் பா. சிங்காரவேலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மதுரைச் சீமை நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களும் !



நூல் ஆசிரியர் : முனைவர் பா. சிங்காரவேலன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிகாவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024.

*****
நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்கும் விதமாக நூலாசிரியர் முனைவர் பா. சிங்காரவேலன் நூல் வடித்துள்ளார். நாட்டுப்புறக் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் விளிம்பிற்கு சென்று வருகின்றன.  உலகமயம், தாராளமயம், நவீனமயம் காரணமாக நாட்டுப்புறக் கலைகளின் மீதான நாட்டம் குறைந்து, கலைஞர்கள் வறுமையின் காரணமாக கலைகளை விட்டு விட்டு வேறு வேறு தொழில்களுக்கு சென்று விடுகின்றனர்.  முனைவர் பட்ட ஆய்வேட்டை சுருக்கி, ஆவணமாக்கி, நூலாக்கி உள்ளார்.  பாராட்டுக்கள்.

கரகாட்டம், தப்பாட்டம், தோற்பாவைக்கூத்து, ஒயிலாட்டம், தேவராட்டம் சேவையாட்டம், அனுமன் ஆட்டம், நாடகம், சிலம்பாட்டம், மயிலாட்டம், மாடுஆட்டம், புலிஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் இப்படி நாட்டுப்புறக்கலைகள் பற்றி மிக விரிவாகவும், விளக்கமாகவும் பதிவு செய்துள்ளார்.

முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் சுற்றுலாத் துறை செயலராக இருந்தபோது   இந்தக் கலைகளை சுற்றுலாத்துறையின் சார்பில் நடத்திய தெருவோரத் திருவிழாவில் நடத்திய போது மதுரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாராட்டினார்கள். இதுபோன்ற கலைகள் வெளிநாடுகளில் இல்லை. வாராவாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தொடர்ந்து ஒரு வருடங்கள் பல்வேறு கிராமியக் கலைகள் நிகழ்ச்சி நடந்தது. நூலாசிரியர் முனைவர் பா. சிங்காரவேலன் வந்து பார்த்து ஆய்வு செய்ததை நூலிலும் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை நடத்திய வாராந்திர கலைவிழாவில் நடந்த நிகழ்வையும் நூலில் பதிவு செய்துள்ளார்.புகைப்படமும் உள்ளது .

  தற்போது பொங்கல் திருவிழாவின் போது வருடம் ஒரு முறை இக்கலைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனைப் பார்ப்பதற்காவே பொங்கல் விழா நடக்கும் ஜனவரி மாதத்தில் உலக நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வருகின்றனர்.  வருடாவருடம் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளும் உண்டு. அயல்நாட்டவர்கள் விரும்பும் அளவிற்கு, தமிழர்கள் தமிழ்க்கலையை விரும்பவில்லை என்பது வேதனை.

கரகாட்டம் :  கரகம் என்ற செம்பைத் தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதால் கரகாட்டம் எனப்படும்.  கரகம் என்ற சொல்லைத் தொல்காப்பியர் பயன்படுத்தி உள்ளார் என்ற தகவலும் நூலில் உள்ளது. கரகத்தின் வருகை, வாழுமிடம், பாடும் பாடல் என யாவும் நூலில் உள்ளது.  விடுகதை போன்ற கரகாட்டப் பாடல்கள் நன்று.  நூலாசிரியர் முனைவர் பா. சிங்காரவேலன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது. 

தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் மாணவர் நூலாசிரியர் முனைவர் பா. சிங்காரவேலன். தமிழ்த்தேனீயைப் போல கலைத்தேனீயாக களத்திற்குச் சென்று, ஓடி ஓடி உழைத்து கருத்துக்களை சேர்த்து நூலாக்கி உள்ளார்.

தப்பாட்டம் : தோற்கருவியை இசைத்து அதன் இசைக்கு ஏற்றவாறு ஆண்களால் ஆடப்பட்டு வரும் நிகழ்த்துக் கலையே தப்பாட்டமாகும்.  தம்பட்டம் என்பது தற்காலத்தில் தப்பட்டை அல்லது தப்பு என வழங்கப்படுகிறது.  சரியாக ஆடும் ஆட்டத்தை தப்பாட்டம் என்கிறார்களே என்று நான் வியந்ததுண்டு. உலகில் எத்தனையோ இசைக்கருவிகள் இருந்த போதும் தப்பாட்டம் எழுப்பும் கலைக்கு ஈடு இணை உலகில் இல்லை. வெளிநாட்டவர் இந்த ஒலி கேட்டு பிரமிக்கின்றனர்.

தோற்பாவைக் கூத்து : தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலைகளில் பொருத்தி, கதைப் போக்கிற்கேற்ப உரையாடியபடி, ஆட்டிக்காட்டுவது தோற்பாவைக் கூத்து. விரிவாக எழுதி உள்ளார்.  இந்தக் கூத்து நடத்தும் திரு. துரைராஜ்ராவ் அவர்களை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன்.  நடுவண் அரசின், குறும்படத்திற்காக சென்று அவரை படப்பிடிப்பு நடத்தினோம்.  மிகச்சிறந்த கலைஞர், அவரது புகைப்படமும், நேர்முகமும் நூலில் உள்ளது. இன்னும் அவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர் . மேலும் அவர்களின் எதிர்பார்ப்பையும் பதிவு செய்துள்ளது சிறப்பு.

மதுரையில் உள்ள கடம்பவனத்தில் சில நாட்டுப்புறக்கலைகள் ஞாயிறு தோறும் நடத்தி வருகின்றனர். கலையில் ஆர்வம் உள்ளவர்கள் கடம்பவனம் சென்று ரசித்து கலைக்கு ஆதரவு தரலாம்.

ஒயிலாட்டம் என்பது ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்துக்கொண்டு இசைக்கேற்ப அத்துணியை வீசி ஆடும் குழு ஆட்டமாகும்.  இது நாட்டுப்புறங்களில் ‘ஒயில் கும்மி’ என்று குறிப்பிடப்படும்.இந்தக் கலை சில கிராமங்களில் இன்றும் பொங்கல் திருவிழாவின் போது வயதான பெரியவர்களும் ஆடி வருகின்றனர் .நான் பார்த்து இருக்கிறேன்

இப்படி ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைகளுக்கும் விளக்கம் எழுதி, அந்தக்கலைஞர்கள் பற்றி விபரம் எழுதி, தமிழ்க்கலைகளை ஆவணப்படுத்தி உள்ள நூலாசிரியர் முனைவர் பா. சிங்காரவேலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  நூலாசிரியர் மேலூர் அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆய்வையும் வெற்றிகரமாக முடித்து நூலாக்கி உள்ளார்.

தேவராட்டம் சேவையாட்டம் :  தேவராட்டம் என்ற சொல்லிற்கு வானத்து தேபுருசர்கள் ஆடும் ஆட்டம் என்பது பொருளாகும்.  ஆண்கள் கையில் சிறு துணியுடனும், கால்களில் சலங்கை கட்டியும், இடுப்பில் வேட்டிக்கட்டிக் கொண்டும் ஆண்கள் மட்டும் இவ்வாட்டத்தை ஆடுகின்றனர்.
அனுமன் ஆட்டம் :  அனுமன் போன்று புனைந்து ஆடும் ஆட்டம்.  மதுரை மாவட்ட சௌராட்டிர மக்களால் அனுமன் ஆட்டம் ஆடப்படுவதைக் கள ஆய்வில் காண முடிகிறது. 

நாடகம் :  நாடகக்கலை மட்டும் நவரசத்துடன் நல்லதொரு கருத்துக்களைச் சமுதாயத்திற்கு உணர்த்தின.வள்ளி திருமணம் நாடகம்   முன்பு விடிய விடிய நிகழ்த்துவார்கள் .இப்போது நிகழ்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை .நாடக நடிகர்கள் ஆற்றல் மிக்கவர்கள் வசனம் பேசுவார்கள் ,நடிப்பார்கள் ,பாடுவார்கள் இசைக் கருவிகள் இசைப்பார்கள் . நாடகக்  கலையும்  நலிந்து வருகின்றது .

தற்காலத்தில் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், கே.ஏ. குணசேகரன், புஷ்பவனம் குப்புசாமி, பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தரராஜன் எனப் பலரும் மேடை நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகின்றனர்.  இதனால் மரபான உடை, ஒப்பனைகளை மாற்றி விரும்பிய வண்ணம் ஆட்டமுறைகளை மாற்றி உள்ளனர்.என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார் .

இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.  நாட்டுப்புறக் கலைகள் பற்றிய ஆய்வு நூல்.  இக்கலைகளை நேரில் பார்க்காதவர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் இக்கலைகள் பற்றி அறிய முடியும்.  கலைகளின் புகைப்படங்களும் உள்ளன. ஒவ்வொரு கலையாக தேடிச்சென்று கலைகளை ரசித்து கலைஞர்களை நேர்முகம் கண்டு உழைத்த உழைப்பை, ஆய்வை, நூலாக்கி தமிழ் கூறும் நல்உலகத்திற்கு வழங்கியுள்ள நூலாசிரியர் முனைவர் பா. சிங்காரவேலன் அவர்களுக்கு பாராட்டுக்கள். 
இந்நூலில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான கலைகளை நான் நேரடியாக பார்த்து ரசித்த அனுபவம்  உண்டு .இந்த நூல் படிக்கும்  போது   அந்த மலரும் நினைவுகளை மலர்விதது .
நூலினை மிக நேர்த்தியாக அச்சிட்ட காவ்யாவிற்கும் பாராட்டுக்கள். 
நூல் இணைத்ததில் கவனம் செலுத்தி இருக்கலாம்.  சில பக்கங்கள் புரட்டியதும் கையில் வரும் விதமாக உள்ளது.  அடுத்த பதிப்பில் கவனமாக நூல் இணையுங்கள்.

.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்