படித்ததில் பிடித்தது ! நன்றி. தி இந்து தமிழ் நாளிதழ் !

படித்ததில் பிடித்தது !

நன்றி. தி இந்து தமிழ் நாளிதழ் !

மொழி பிரிக்காத உணர்வு: மனதைக் கீறி விதை போடு

-- தன்னம்பிக்கை, சுயமரியாதை, உற்சாகம் போன்றவை வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள மிகத் தேவையான உணர்வுகள். புத்தகங்களையும் அறிவுரைகளையும்விட இவற்றை ஓர் இனிய பாடல் நமக்கு விரைவாகவும் அதிக வீச்சுடனும் அளிப்பது வியப்புக்குரியது. இவ்வித உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களைப் பார்ப்போம்.
வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.
திரைப்படம்: குட்டி (சிறிய பெண்). பாடலாசிரியர்: குல்ஜார்.
இசை: வசந்த் தேசாய். பாடியவர்: வாணி ஜெயராம்.
பாடல்:
ஹம் கோ மன் கீ சக்தி தேனா மன் விஜய கரே
தூஸ்ரா கீ ஜெய் ஸே பஹ்லே குத் கோ ஜெய் கரே
ஹம் கோ மன் கீ சக்தி தேனா...
பொருள்:
எங்களின் மனம் வெற்றியடையும் வலிமை பெறுக
மற்றவர்களின் வெற்றிக்கு (பாடுபடும்) முன்பு
நமது வெற்றிக்கு உழைக்க முயலுவோம்
ஏற்றத்தாழ்வு பேதங்களை இதயத்திலிருந்து எடுத்திட
இனிய நண்பன் இழைத்த தவறினைப் பொறுத்திட
எங்கள் மனதிற்கு வலிமை தருக
பொய்களிடமிருந்து விலகி நிற்கவும்
உண்மைகளை நெஞ்சில் உரமாகக் கொள்ளவும்
எங்கள் மனதிற்கு வலிமை தருக
இன்னல் வரும் பொழுதில்
அறத்துடன் நிற்கவும்
அற வழியில் செல்லவும்
எங்கள் மனதிற்கு வலிமை தருக.
இந்தப் பாடலைப் பாடிய வாணி ஜெயராம் தன் குரல் வளமையால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தார். இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பினால் இந்திப் பட உலகில் பெரும் சலசலப்பு எழுந்ததாகச் சொல்வார்கள். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழப்படுபவர் லதா மங்கேஷ்கர்.
வாணி ஜெயராமைப் பாடவைப்பதை அவர் எதிர்த்ததாகச் செய்தி. வாணியை ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களின் படங்களில் இனிப் பாட மாட்டேன் என்று லதா சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்த இந்திப் பாடலுக்கு இணையான தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.
திரைப்படம்: ஆட்டோகிராஃப். பாடலாசிரியர்: பா. விஜய்.
இசை: பரத்வாஜ். பாடியவர்: சித்ரா
பாடல்:
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள்தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம்தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சைப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா
துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளைக் கொண்ட இந்தப் பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.

கருத்துகள்