கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர் நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்
நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன்.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017.  போன் : 044 24342810  விலை : ரூ. 150 
*****
       கணினி யுகத்திற்குக் கம்பர் என்ற நூல் படைத்து தமிழ் இலக்கிய நேயர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர் என்ற நூல் படைத்துள்ளார்.  இந்நூல் நூலாசிரியரின் 125வது நூல் என்ற பெருமை பெற்றுள்ளது.

       வானதி பதிப்பகம் தமிழ்த்தேனீ இரா. மோகன் வெற்றி கூட்டணியாகி விட்டது.  தொடர்ந்து தரமான நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.  முன் அட்டையில் திருவள்ளுவரும், பின் அட்டையில் நூலாசிரியரும், பதிப்பாளரும் உள்ளனர்.  நல்ல வடிவமைப்பு.

       125 நூல்கள் எழுதியவர், முதல்முறையாக இந்நூலை செல்ல மகள் அரசிக்கும், அவரது வாழ்க்கைத் துணைவர் பாலாஜிக்கும் பரிசாக்கி உள்ளார்.  காரணம், அமெரிக்காவில் மகள் இல்லத்தில் தங்கி இருந்த காலத்தில் உருவானவை என்பதால்.  அமெரிக்கா சென்றாலும் நூல் எழுதுவதை விடுவதில்லை என்ற நூலாசிரியரின் குறிக்கோளுக்கு பாராட்டுக்கள்.

       மு.வ. அவர்களின் செல்லப் பிள்ளை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், மு.வ. அவர்களைப் போல திருக்குறள் உரை எழுதவில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு.  அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக, திருக்குறளை ஆய்வு செய்து நவீன யுகத்திற்கு நவீன யுத்திகளுக்கு மேலாண்மைக்கு திருக்குறள் எவ்வாறெல்லாம் பொருந்தி வருகின்றன என்பதை ஆய்ந்து ஆராய்ந்து மிக நுட்பமாக வடித்திட்ட நூல் இது.

       பேச்சுத் துறை, எழுத்துத்துறை இரண்டு தேரிலும் ஒரே நேரத்தில் வெற்றி பவனி வரும் ஆற்றல்சார் பேராசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் ஆற்றல் மிக்க படைப்பு இந்நூல்.

       12 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி போல நூலில் 12 கட்டுரைகள் உள்ளன.  கணினி யுகத்திற்குத் திருக்குறள், ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி, அறிவார்ந்த உணர்ச்சி ஆளுகை, எண்களின் ஆட்சி, தொடர்பியல் திறன், உணவியல் நெறிமுறைகள், அழகிய தமிழ் நூல், பொருளியல் சிந்தனைகள், புலப்பாட்டு நெறி, பன்முக நோக்கு.  தலைப்புகளை வாசித்தாலே திருக்குறளில் இவ்வளவு உள்ளனவா! இவ்வளவு நாட்களாக திருக்குறளை இந்தக் கோணங்களில் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை வரவழைத்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர்.

       திருக்குறள் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு பல நாட்கள் ஆகும் எனக்கு.  ஆனால் ஒருவரே 12 கட்டுரைகள் 12 விதமாக வடித்து இருப்பது வியப்பு.  உலக இலக்கியங்களில் தலைசிறந்த நூல் திருக்குறள்.  உலக அரங்கில் திருக்குறளின் மதிப்பை இன்னும் இன்னும் உயர்த்தும் விதமாக உள்ளது இந்நூல்.  இந்நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கின்றேன்.

       திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன, வருகின்றன, இன்னும் வரலாம்.  இந்நூல் புதிய கோணத்தில் புதிய பார்வையில் வந்துள்ளது.  12 கட்டுரைகளிலும் திருக்குறள் பற்றி அறிஞர்கள் எழுதிய கருத்துக்களை தலைப்பு தகவலாக வைத்து கட்டுரையைத் தொடங்கி இருப்பது சிறப்பு.  திரு. ப. மருதநாயகம், திரு. எஸ். சீனிவாசன், திரு. வா.செ. குழந்தைசாமி, திரு. சோ. ந. கந்தசாமி, திரு. வ.சுப. மாணிக்கம், திரு. ச.வே. சுப்பிரமணியன், திரு. ரா.பி. சேதுப்பிள்ளை, திரு. ஜி. சுப்பிரமணிய பிள்ளை, திரு. எஸ். வையாபுரி பிள்ளை, திரு. கா. செல்லப்பன், திரு. எஸ். இராமகிருஷ்ணன், திரு. அ.கி. பரந்தாமனார் திருக்குறள் ஜாம்பவான்கள், அறிஞர்கள் தொடங்கி இன்றைய பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் வரை திருக்குறள் பற்றி அவர்கள் சொன்ன விளக்கத்தை மேற்கோளாக கட்டுரையின் தலைப்பு வரிகளாக எழுதி கட்டமைத்த யுத்தி மிக நன்று.  12 அறிஞர்கள் கருத்தையும் ஒரே நூலில் அறிய வாய்ப்பாக உள்ளது.

       ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டாம் நூற்றாண்டிலேயே இப்படி ஒரு மனிதன் சிந்தித்து எழுதி உள்ளார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும்.  அறநெறியாளர்கள் காந்தியடிகள் தொடங்கி கலாம் வரை நேசித்த, வாசித்த, கடைபிடித்த நூல் திருக்குறள்.

       திருக்குறளின் பல்வேறு பரிமாணங்களை நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.  ஆங்கிலத்தில் எத்தனையோ தன்னம்பிக்கை நூல்கள் வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் நமது திருக்குறளுக்கு ஈடாகாது.  திருக்குறளில் பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு எல்லாம் உள்ளன.  திருக்குறளில் என்ன இல்லை? என்று ஆய்வு செய்தால் தோற்று விடுவார்கள்.

       நூலில் இருந்து பதச் சோறாக சில வரிகள், உங்கள் பார்வைக்கு :
ஆளுமை வளர்ச்சி;

       இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
       இடும்பை படாஅ தவர்  (623)

என்னும் குறட்பா இவ்வகையில் குறிப்பிடத்தக்கது ஆகும். இடும்பை படாஅதவர் – அளபெடை இலக்கணம் கூறினால் மட்டும் போதாது.  சிலர் இடும்பையை அரைவாசி, முக்கால்வாசி எதிர்த்து நிற்பர்.  முழுவதும் கடைசி வரை எதிர்த்து நில்லார்.  இவ்வாறு சிறு இடைவெளி விட்டாலும் இடும்பை வந்து தாக்கி விடும் என்பதற்காக இடும்பை ‘படாஅதவர்’ என்று நீட்டினார் திருவள்ளுவர்.  கடைசி வரை உறுதியுடன் இருப்பவர் என்பது பொருள்.
       கடைசி வரை துன்பம் கண்டு துவண்டு விடாமல் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் ஆளுமைத் திறனையும் நூலில் நன்கு எடுத்தியம்பி உள்ளார்.

       திருக்குறளில் எண்கள், எந்தெந்த குறளில் வருகின்றன என்பதை ஆராய்ந்து அவற்றை விளக்கி இருப்பது சிறப்பு.  ஒன்று என்று தொடங்கி ஆயிரம் கோடி வரை எண்கள் திருக்குறளில் இருப்பதை ஆராய்ந்து எழுதியது சிறப்பு.  திருக்குறளில் உணவு பற்றியும், உணர்வு பற்றியும் உள்ளதை உள்ளபடியே மிக நுட்பமாக எடுத்தியம்பி உள்ளார். 

 திருக்குறளின் சிறப்பாக சுருங்ச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி உரைத்தல், ஓசையுடைமை, ஆழம் உடைத்தாதல், முறையின் வைப்பு, உலக மலைமாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்து ஆகுதல் இப்படி பத்து கூறுகளுக்கும் பொருத்தமான திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கிய விதம் ஆளுமை.  திருக்குறளின் பெருமை என்பது இமயமலையை விட பெரியது என்பதை சான்றுகளோடு நிறுவிடும் நூல்.

       ‘திருக்குறளும் மனிதவள மேம்பாடும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முதல் முனைவர் பட்டம் பெற்ற சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், திரு வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், ‘ஓடும் நதியின் ஓசை’ நூலில் எழுதிய – நேற்று அவன் கல்லாக இருந்திருக்கலாம் ; இன்று சிற்பமாக மாறியிருக்கலாம் கவிதையை மேற்கோள் காட்டி உள்ளார் .

மெய்யியல் நோக்கு பகுதியில்.  முதுபெரும் அறிஞர்கள் வ.சுப. மாணிக்கனார் தொடங்கி இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் வெ. இறையன்பு வரை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். 

அய்யா அவர்கள் எழுதிய ‘கணினி யுகத்திற்குக் கம்பன்’ நூல் படித்த போதே, ‘கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்’ என்னும் நூலையும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  என் ஆசை பூர்த்தியானது.  நன்றி.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்