உலக திருநங்கையர் தின வாழ்த்துக்கள்...கவிஞர் இரா .இரவி !

உலக திருநங்கையர் தின வாழ்த்துக்கள்...கவிஞர் இரா .இரவி !



திருநங்கைகள் !   கவிஞர் இரா .இரவி !

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்த
உயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் !

உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லை
திருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை !

ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள்
அன்பு செலுத்துங்கள் அப்புறம் பாருங்கள் !

அவர்களைப் போல நல்லவர்கள்
அகிலத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள் !

நடனத்தில் சாதனை புரிந்த நர்த்தகி நடராஜ்
ஊடகத்தில் சாதனை புரிந்த ரோஸ் !

ஆண்பால் பெண்பால் இரண்டும் இல்லாத
மூன்றாம் பால் இவர்கள் திருநங்கைகள் !

ஆண் இனத்திலும் சேர்ப்பதில்லை
பெண் இனத்திலும் சேர்ப்பதில்லை !

தனி ஒரு இனமாகஎல்லோரும் பார்க்கிறார்கள்
தனிப்படுத்தப் பட்டதை எண்ணி வருந்துகிறார்கள் !

குடும்பத்தில் தொடங்கியப் புறக்கணிப்பு
குமுகாயத்திலும் தொடர்வது வெறுப்பு !

திரைப்படங்களில் காட்டிய கேலி கிண்டல்
தெருவெங்கும் தொடர்கையில் வேதனை !

பார்ப்பவர்கள் சிரிக்கையில் உள்ளத்திற்குள்
அழுகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை !

ஏன்? இப்படி ஆனோம் என்று தினமும்
எண்ணி எண்ணி வருந்துகின்றனர் !

திருநங்கையாகப் பிறந்தது அவர்கள் பிழையன்று
இயற்கை செய்த பிழைதான் இன்று !

ஆதியில் தெரிவதில்லை திருநங்கை என்று
பாதியில் வந்த மாற்றம்தான் இது !

உழைத்து வாழ விரும்பினாலும்
உழைக்க வாய்ப்பு வழங்குவதில்லை !

மனிதநேயம் மனிதர்களுக்கு வேண்டும்
மனிதநேயம் மறந்தால் மனிதனே அன்று !

சங்கடப் படும் படி தயவுசெயதுப் பார்க்காதீர்கள்
சக மனுசியாக எல்லோரும் நேசியுங்கள் !

--------------------------------------------------------------

.திருநங்கைகள் !     கவிஞர் இரா .இரவி !

உண்டு காப்பீடு 
ஆடு மாடு வயல்களுக்கு
இல்லை திருநங்கைகளுக்கு !

.
முரண் வடஇந்தியாவில் ராசி 
தென்இந்தியாவில் ராசியன்று 
திருநங்கைகள் !
.
ஆண்களும் ஏற்பதில்லை 
பெண்களும் ஏற்பதில்லை 
திருநங்கைகள் !

வாழ்க்கையில் போராட்டம் நமக்கு 
வாழ்க்கையேப்  போராட்டம்
திருநங்கைகள் !

வழி இல்லாத வாழ்க்கை 
வலி மிகுந்த  வாழ்க்கை 
திருநங்கைகள் !

மூன்றாம் பால் அல்ல 
முதல் பால் 
 திருநங்கைகள் !

வாய்ப்பு வழங்கினால் 
வாகை சூடுவார்கள் 
திருநங்கைகள் !

தவறே செய்யாமல் 
தண்டனைப் பெற்றவர்கள் 
திருநங்கைகள் !

குடும்பத்தில் எதிர்ப்பு 
குமுகாயத்தில் புறக்கணிப்பு 
திருநங்கைகள் !

தவறான பிம்பம் தகருங்கள் 
மனிதாபிமானம்  விதையுங்கள் 
திருநங்கைகள் !

சகமனுசியாக  மதியுங்கள் 
சகோதரியாக நினையுங்கள் 
திருநங்கைகள் !

கேலியாகப் பேசாதீர்கள் 
தோழியாகப் பாருங்கள் 
திருநங்கைகள் !
------------------------------------------------------------------------------
தனைகளை சாதனைகளாக்கிய கலைமாமணி திருநங்கை
நர்த்தகி நடராஜ் - கவிஞர்:இரா.இரவி !

உலகில் வாழும் மனித இனங்களில் ஆண்,பெண் என்ற இருபாலர் தவிர மூன்றாவதாக திருநங்கை என்ற ஒரு இனமும் உண்டு. சமுதாயத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்பு இன்று தான் அவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. கல்லூரி பேராசிரியராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அனுப்பானடி என்ற பகுதியில் பிறந்த திருநங்கை நர்த்தகி நடராஜ் குழந்தைப் பருவத்திலிருந்து பின் திருநங்கை காலம் தொட்டு அவர் சந்தித்த சோதனைகள்,வேதனைகள்,அவமானங்கள்,சொல்லடி இவை எல்லாம் சொல்லில் அடங்காது.வார்த்தைகளில் வடிக்க முடியாது. இவரைப் போன்ற திருநங்கை சக்தியின் நட்போடு, ஆடல் கலை பயின்று, இன்று அந்தக் கலையின் உச்சம் அடைந்து உள்ளார். கண்களில் கவிதை பாடுகிறார்.நடன அசைவுகளில் அசத்தி விடுகிறார்.

பரதநாட்டியம் என்றால் அது தமிழர்களின் கலை அல்ல,அது புரியாத மொழியால் பாடுவார்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்தக் கருத்து தவறு. தமிழர்களின் இலக்கியங்களில் ஆடல் கலை பற்றி பல்வேறு சான்றுகள் உள்ளன. தொல்காப்பியத்தில் சதிர் என்ற சொல்லில் ஆடல் இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஆடலே கதைக்கு கருவாக உள்ளது. இப்படி தமிழர்களின் கலையான நடனக் கலையை தொலைத்து விட்டு நிற்கிறோம். இது போன்ற பல கருத்துக்களை தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேல்தட்டு வகுப்பினருக்கு மட்டுமே சொந்தம் என்று உள்ள பரத நாட்டியக் கலையை மேல்தட்டு வகுப்பினரிடமிருந்து பயின்று கற்றுத் தேர்ந்து இன்று இமாலய வளர்ச்சி பெற்று விட்டார் திருநங்கை நர்த்தகி நடராஜ். மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பே, நான் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பார்த்து இருக்கிறேன். தற்போது 14.08.2009 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 15-வது ஆண்டு விழா கலை இரவு நிகழ்ச்சி நாகமலை பகுதியில் நடைபெற்றது. கரகம்,காவடி,தப்பாட்டம் நடுவே நர்த்தகி நடராஜின் பரத நாட்டியமும் இடம் பெற்றது. மக்கள் வெள்ளம் மழை என்றும் பாராமல் வந்து குவிந்து இருந்தனர்.

மகாகவி பாரதியார் பாடல்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்,கவிஞாயிறு தாராபாரதியின் பாடல் அரங்கேற்றமானது. மேல்தட்டு நடன மகளிராக இருந்தால் இந்த மேடை ஏறி இருக்க மாட்டார்கள். ஆனால் நர்த்தகி நடராஜ் மேடை ஏறி அற்புதமாக ஆடினார்கள். முதலில் பேசத்தான் அழைத்தார்கள்,ஆனால் ஆடி விட்டு பேசுகிறேன் என்று சொல்லி மிகச்சிறப்பான ஆடினார்கள். மக்களில் கைதட்டலால் நாகமலையே எதிரொலித்தது.1980-களில் எந்த மக்கள் கேலி செய்தார்களோ,கல்லால்,சொல்லால் அடித்தார்களோ அதே பிறந்த மதுரை மண்ணில் அமெரிக்கா,இலண்டன்,கனடா போன்ற நாடுகளுக்கு சென்று உலகப்புகழ் அடைந்து விட்டு, பிறந்த மதுரை மண்ணில் வந்து ஆடி பாராட்டைப் பெற்ற போது மெய் சிலிர்த்துப் போனேன்.

கவிஞாயிறு தாராபாரதியின் "வெறுங்கை என்பது மூடத்தனம்" என்ற பாடலுக்கு, அந்த வரிகளுக்கு ஏற்ப மிகச்சிறப்பான அபிநயம்,நொடிக்கு நொடி முகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. புகழ்பெற்ற பெண் நடனக் கலைஞர்களை விஞ்சிடும் வண்ணம் மிகச்சிறப்பான நடனம். உலகில் இனி,இவரளவிற்கு நடனம் பயின்று வேறு யாராலும்,எந்த ஒரு திருநங்கையாலும் ஆட முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம்.அந்த அளவிற்கு மிகச் சிறப்பான நடனம். உழைக்கும் மக்கள் அனைவரும் மக்கள் மொழியான தமிழிலேயே பாடல்கள் இருந்தததால் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். ஆட்டம் சிறப்பு என்றால் அவரது பேச்சோ சிறப்போ சிறப்பு. அந்த அளவிற்கு எல்லோருக்கும் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக மிகச் சிறப்பான உரையாற்றினார்கள்.கலைமாமணி உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்கள்,எந்தவித செருக்கும் இல்லை.

ஒரு காலத்தில் கடலை விற்றுக் கொண்டு, காசு யாசகம் கேட்டுக் கொண்டு,பாடல் பாடிக் கொண்டு கேலிப் பொருளாக இருந்த திருநங்கை சமுதாயத்தில் பிறந்து ,இன்று ஆண்,பெண் இருபாலரையும் விஞ்சிடும் வண்ணம் மிகச்சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து,நடனப் பள்ளி தொடங்கி நடனத்தை வளர்த்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார். இவரது இந்த வளர்ச்சிக்கு,சாதனைக்கு,புகழுக்கு,உற்ற துணையாக, தோழியாக,தாயாக இருந்து வரும் திருநங்கை சக்தியும் பாராட்டுக்குரியவர். இன்றைக்கு திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டதன் காரணமாக ஊடகங்களில் திருநங்கையே தொகுப்பாளராக வந்து முத்திரை பதித்து வரும் காலத்தில்,திருநங்கைகளுக்கான தவறான பிம்பத்தை உடைத்து எறிந்து, அவர்களது உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்று விழிப்புணர்வை விதைக்கும் விதமாக கிராமியக்கலை நடைபெறும் கலை இரவில் பரதநாட்டியம் என்னும் தமிழர்களின் தொன்மைக் கலையை அரங்கேறி அற்புத உரையாற்றி சாதித்த நர்த்தகி நடராஜ் பாராட்டுக்குரியவர். வாழ்க்கையில் விரக்தி,சோகம் அடைந்த மக்களுக்கு சுறுசுறுப்பையும், தன்னம்பிக்கையையும் விதைத்துள்ளார்

உலகின் முதல் மனிதன் தமிழன், உலகின் முதல் மொழி தமிழ்மொழி, உலகின் முதல் நடனம் தமிழர்களின் சதிர் நடனம். நடனம் என்பது தமிழர்களின் ரத்தத்தோடு,உணர்வோடு கலந்த ஒன்று. எனவே தமிழர்கள் இது நமது கலை அல்ல என்று ஒதுக்குவதை விடுத்து குழந்தைகளுக்கு தமிழர் கலையை பயிற்றுவிப்போம். தமிழர்கள் தொலைத்து விட்ட அடையாளங்களை மீட்டெடுப்போம்,வாருங்கள்.

முதலில் இவர் திருநங்கை என்று சொல்லாமல்,நடனம் மட்டும் ஆடச் சொன்னால் பார்ப்பவர்களால் இவர் திருநங்கை என்பதையே கண்டுபிடிக்க முடியாது.அந்த அளவிற்கு பிரபல நடன மங்கைகளையும்,மிஞ்சுகின்ற வண்ணம் மிகச்சிறப்பானதொரு நடனம் புரியும் திருநங்கை நர்த்தகி நடராஜ் மனித குலத்திற்கே ஒரு பாடமாக திகழ்கின்றார். தானும் உயர்ந்து திருநங்கை இனத்திற்கும் பெருமை சேர்த்து வரும் நர்த்தகி நடராஜ்,சக்தி வாழ்க பல்லாண்டு!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

  1. மிக்க நன்றி! மிகுந்த பெரும் பரிசு ! திருநங்கையருக்கு!தங்களின் தன்னலமற்ற அன்பு!! நான் உருவாக்கி எனக்கே சூட்டிக்கொண்ட திருநங்கை எனும் விகுதி! (இதனை கலைஞர் உருவாக்கினார் என தவறான பரப்புரையும் வழங்கி வருகின்றது. அதனை உங்களைப் போன்றோர்தான் எடுத்தியம்ப முடியும்.) இன்று உலக மறு பாலின மதிப்புறு அடையாளமாகியது! இதுபோதும் எனக்கு! தொடர்ந்து இணைந்திருப்போம்! தோள் கொடுப்போம்.
    அன்புத் தமையாள்
    கலைமாமணி திருநங்கை நர்த்தகி நடராஜ்

    narthakiandsakthi@yahoo.com
    Sent from my iPhone

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக