இலக்கியத்தில் மேலாண்மை ! ஆசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . மதிப்புரை தி இந்து தமிழ் !

இலக்கியத்தில் மேலாண்மை !
ஆசிரியர்  முதன்மைச் செயலர் முதுமுனைவர்
வெ .இறையன்பு இ .ஆ .ப .
மதிப்புரை தி இந்து தமிழ் !

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article8727737.ece

--

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்’ என்றார் பாரதி. தன்னுடைய நுட்பமான கலைப் பார்வையுடன் பல தகவல்களை ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூலில் திரட்டித் தந்திருக்கிறார் வெ.இறையன்பு. பொதுவாக, திருக்குறளில் 517-வது குறளான
‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’ என்கிற திருக்குறளைத்தான் காலம்காலமாக மேலாண்மைக்குரிய எடுத்துக்காட்டாக பலரும் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள்.
நற்றிணையில் வரும் ஒரு பாடலில் ‘வினை முடித்தன்ன இனியோள்’ என்கிற வரியின் மூலம், ஒரு செயலைச் செய்து முடித்த பிறகு ஏற்படும் இன்பத்துக்கு இணையானவள் என்கிற பொருளைப் படிக்கிறபோது, ஒழுங்காக முடிக்கப்பட்ட செயல் என்பதற்கு இலக்கியம் தரும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.
இவை எல்லாம் அறிந்ததே. நாம் அறியாத பல மேலாண்மை நுட்பங்கள் விரவிக் கிடக்கிற இலக்கியங்களில் இருந்து பல செய்திகளை எளிமையாக எழுத்துரைக்கிறார் வெ.இறையன்பு.
இலக்கியம் சொல்லும் திறன்கள்
ஆய்வு நோக்கோடு பல மேலாண்மைச் செய்திகளை இலக்கியத்தில் இருந்து கண்டெடுத்திருப்பதால், ஆய்வு நூல் என்கிற வகைமைக்குள் இந்தப் புத்தகத்தைப் பட்டியலிட்டுவிட்டுச் சுலபமாக நகர்ந்துவிட முடியாது.
இலக்கியங்களில் காணப்படுகிற முடிவெடுக்கும் திறன், நேர மேலாண்மை, தலைமைப் பன்பு, எளிமையான தகவல் தொடர்பு போன்ற மேலாண்மைத் தகவல்களை இறையன்பு எடுத்துக்காட்டும்போது, அதன் பக்கவிளைவாக வரலாறு, அறிவியல், கணிதம், வான சாஸ்திரம் போன்ற துறைகளின் பேருண்மைகளும் நாம் அறியக் கிடைக்கின்றன.
உதாரணத்துக்கு இறையன்புவின் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:
எப்போதும் கொடுப்பவர்கள் கைகள் உயர்ந்தும், அதை ஏற்பவரின் கைகள் தாழ்ந்தும் இருப்பதுதான் இயல்பு. அக்பர் தனது அரசபையில் இருப்பவர்களிடம் “எப்போதுமே கொடுப்பவர்கள் கைகள் உயர்ந்துதான் இருக்கும். ஒரே ஒரு சமயத்தில்தான் எடுத்துக்கொள்பவரின் கைகள் உயர்ந்து இருக்கும்.
அது எப்போது?” என்று கேட்கிறார். அதற்கு சாத்தியமே இல்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பீர்பால் மட்டும் “மூக்குப் பொடி கொடுப்பவரின் கைகள் தாழ்ந்திருக்கும், அதை எடுப்பவரின் கைகள் உயர்ந்திருக்கும்” என்று சட்டென்று பதிலடிப்பார். பக்கவாட்டுச் சிந்தனை இருந்தால் எந்தத் திசையிலிருந்து பிரச்சினை வந்தாலும் அதே வேகத்தில் அதைத் திருப்பி அடித்துவிடலாம்.
இறையன்புவின் இன்னொரு எடுத்துக்காட்டு: ஃப்ராங்க் அவுட்லா என்பவர் அழகான சூத்திரம் ஒன்றை அளித்திருக்கிறார்:
“எண்ணங்களைக் கவனி; அவை சொற்களாகின்றன.
செயல்களைக் கவனி; அவை பழக்கங்களாகின்றன.
பழக்கங்களைக் கவனி; அவை குணாதிசயமாகின்றன.
குணாதிசியங்களைக் கவனி; அதுவே உன் விதியாகிறது.”
இதே கருத்தைப் பிருகதாரண்யக உபநிடதமும் வலியுறுத்துகிறது.
இன்றிருக்கும் சூழலில் தகவல் என்பது அதிகாரமாகவும், சக்தியாகவும் கருதப்படுகிறது. யாருக்கு விரைவாகத் தகவல் கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாகிறார்கள், போட்டியாளர்களை எளிதில் அவர்கள் விஞ்சிவிட முடிகிறது. கிடைக்கும் நேரம் குறைவாகிக்கொண்டே போவதால் சுருக்கமாகவும், தெளிவாகவும் தகவல்களை அனுப்ப வேண்டியிருக்கிறது. தன்னைத் தகவமைப்பு செய்துகொண்டு, தலைநிமிரத் துடிக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய 600 பக்க மேலாண்மை வழிகாட்டிதான் இந்தப் புத்தகம்!


.

கருத்துகள்