பூமிக்கூடு ! ஓர் எச்சரிக்கை அறிக்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பூமிக்கூடு !


ஓர் எச்சரிக்கை அறிக்கை !

நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு ;ப .கணேஷ் .
65/24.பாரதியார் தெரு ,
தேனாம்பேட்டை ,
சென்னை .600 018,
பேச 98847 80197
24 பக்கங்கள் விளை 20 ரூபாய் 


*****
       நூல் ஆசிரியர் கவிஞர் பவகனேஷ் அவர்களின் நூலான ‘நையப்புடை  நூலிற்கு மதிப்புரை எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன்.  அந்த மதிப்புரையின் ஈர்ப்பின் காரணமாக இந்நூலையும் அனுப்பி இருந்தார். 

 வெப்பமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் வலியுறுத்தும் விதமாக வந்துள்ள நூல்.  பாராட்டுக்கள்.  இந்நூலை சமூக ஆர்வலர் பாவல்ர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஐயா அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம்.  அவரும் இயற்கை நேசர்.  சுற்றுச்சூழல் நல ஆர்வலர்.

       கை அடக்க நூல் தான்.  ஆனால் கருத்துக்களில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் நூல்.  இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று.  அதிலிருந்து சிறு துளி.

       “நீண்ட பெரும் பனைமரத்தை, ஒரு சிறு பனித்துளி படம் பிடிப்பதைப் போல, கவிஞர் ஒவ்வொரு கவிதையையும் வடித்துள்ளார்.”

       ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் குறிப்பிட்ட இயற்கை நேசம் பற்றிய திருக்குறளுடன் நூலைத் தொடங்கியது சிறப்பு.

       பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
       தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.                   322.

       இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
       வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு                      737.

       மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
       காடும் உடையது அரண்                                
                                                         742.              
இந்த முத்தான மூன்று திருக்குறளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்தமைக்க்கு முதல் பாராட்டு.

       இயற்கையை அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  இயற்கையின் சீற்றம் சுனாமி.  சுனாமியின் சோகம் அறிந்தும் இன்னும் திருந்தவில்லை பேராசை மனிதன் என்பதே உண்மை.

       ஏய் மனிதா 
       பூமிக்கூட்டைக் கவனி 
       இயற்கையை
       ஒவ்வொருமுறை நீ 
       இழிவுப்படுத்தும் போதும் 
       இறுகிக் கொண்டிருப்பது 
       உன் வாழ்வு என்று அறி!
       படி அளக்கும் தாய்க்கு துரோகம் 
       இழைப்பதை நிறுத்து !
       பார் 
       பால் சுரக்கும் தனங்களில் 
       உன் மூர்க்கத்தால்
       ரத்தம் கசிகிறது 
       கொஞ்சம் சீலும் வடிகிறது.

       பூகம்பம், எரிமலை, சுனாமி இவையெல்லாம் பூமித்தாயின் ரத்தக்கசிவு தான். 

       இயந்திரமயமாகி வரும் உலகில் திரும்பிய பக்கமெல்லாம் கட்டிடங்கள், விளை நிலங்கள் எல்லாம் மிக வேகமாக வீட்டடிமனைகளாகி வருகின்றன.ஆறுதலான தகவல் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டடி மனைகளாக்கிடத்  தடை விதித்து உள்ளது .பரவலாகி வரும் உலகமயத்தை சாடிடும் வண்ணம் வடித்த விதம் நன்று.

       ஜன்னல் துறந்த சுவர்கள்
       திரும்பும் திசை தோறும் சுவர்கள்
       வெக்கை கூட்டியபடி கண்ணாடி சுவர்கள்
       உள்ளே குளிர்ச்சியும் வெளிக்கு வெப்பமும்
       கக்கி வாந்தி எடுக்கும் அரக்க இயந்திரங்கள்
       மூக்குத் துவாரத்தில் சொருகிய குழாயில்
       வந்தும் போயும் கொண்டிருக்கிறது உயிர்.
       ஏய் மனிதா! 
       பூமிக்கூட்டைக் கவனி!

       விதைக்க முடியாத பொருட்களே இன்று விதைக்கப்படுகின்றன.  மறுசுழற்சிக்கு வாய்ப்பே இல்லை.  விதை இல்லாத பழங்கள் பார்க்க அழகாகவும், சுவையாகவும் இருந்த போதும் விதை உள்ள பழங்களின் ஆரோக்கியம் விதை இல்லாத பழத்தில் இருப்பதில்லை.  இது மக்களுக்கு புரிவதே இல்லை.

விதை அறுத்துக் கரு
வர்த்தகம் செய்யப்படும் வளர்ப்பு மீன் கூட 
கரு அறுத்தே விநியோகம்.
வடிவில் புஸ்தியாக்கப்பட்ட ‘பளிச்’ பழங்கள் 
யூஸ் அண்ட் த்ரோ ரகங்கள்.
நாளைய தலைமுறைக்கு தாரை வார்க்க 
அழுகிய கசடுகள் தான் மிஞ்சும்.
ஏய் மனிதா! 
பூமிக்கூட்டைக் கவனி!

       ஒவ்வொரு பக்கத்தின் இறுதியிலும் ஏய் மனிதா! பூமிக்கூட்டைக் கவனி! என்று பிரசுரம் செய்து விழிப்புணர்வு விதைத்தமைக்கு பாராட்டுக்கள்.  சமுதாய அக்கறையுடன் வடித்த வைர வரிகள் யாவும் நன்று.

       யூஸ் அண்ட் த்ரோ கழிசடை
       விளைவுகள் அலட்சியப் படுத்தி
       கண் மூடி வேகத்தில் அவசரம்
       இன்றைய டெக்னாலஜி நாளைய அவுட்டேட்
       கழிசடையாய்க் கொட்டப்படும் சாதனங்கள்
       மறு சுழற்சிப் புகாத வளர்ச்சி
       மாசு கிளப்பும் ஒட்ட்டை யாகம்
       ஏய் மனிதா! 
       பூமிக்கூட்டைக் கவனி !

       தொழில்நுட்பம் என்ற பெயரில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு இன்றி உணவு, உடை, உறைவிடம் அனைத்திலும் நவீனத்தைப் புகுத்தி மனித நலத்தையும், இயற்கையின் நலத்தையும் சிதைத்து வரும் அவலத்தை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்.  பாராட்டுகள்.   

       நாட்டுக் கோழி விடுத்து, பிராய்லர் கோழி உண்ணும் பழக்கம் இன்று பலரிடம் விட முடியாத அளவிற்கு தொற்றி உள்ளது.  செயற்கை முறையில் உருவாக்கப்படும் கோழிகள் உடலுக்குத் தீங்கி தருகின்றன என எச்சரித்த போதும் கண்டு கொள்ளாமல் உண்டு வருகின்றனர் பலர்.

       விதையில் நஞ்சு!

       பீய்ச்சி அடிக்கப்படும் ரசாயணம்
       செம்பில் முளைக்கும் நச்சுப்பால்
       கொத்தித் தின்னும் பறவைகளின்
       கருப்பைக் கலைக்கும் தானியங்கள்
       காற்றில் கலந்த “வைப்ரேசன் ஷாக்”
       காணவில்லை மண்புழுக்கள்.
        ஏய் மனிதா! 
       பூமிக்கூட்டைக் கவனி !

       உண்மை தான்.  இரசாயண உரம் தூவித் தூவி மண்ணே இரசாயணம் ஆகி விட்டது.  உழவனின் நண்பன் என்று போற்றிய மண்புழுக்கள் இரசாயணம் காரணமாக மாண்டு விட்டன.  இயற்கை விவசாயத்திற்கு எல்லோரும் திரும்புவதே மனிதகுலம் செழிக்க வழியாகும்.

       உலகம் 
       எல்லா உயிர்களுக்கும் பொது
       உன் கருப்பைகளை  
       நீயே கொன்று விடாதே
       மலரட்டும் மனிதம் 
       பெருகட்டும் அன்பு
       வளரட்டும் நட்பு 
       கூடி வாழ்வோம் எல்லோரும்.
       சூழல் பேணுவோம் 
       உறவு போற்றுவோம் !

       இந்த நூலில் எல்லா வாழ வேண்டும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள் என்ற வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுவதோடு நின்று விடாமல் வாடிய பயிர் செழிக்க நீர் பாய்ச்சு என்று மனித நேயம் மட்டுமல்ல , பயிர் நேயம், பறவை நேயம், விலங்கு நேயம், இயற்கை நேயம் விதைக்கும் விதமாக எழுதியுள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பவகணேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
  தொடர்ந்து எழுதுங்கள்,வாழ்த்துகள்.சின்ன வேண்டுகோள் அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள்.

இது போன்ற நூல்கள் இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான  நூல் .வித்தியாசமான சிந்தினை .சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விதைக்கும் நல்ல நூல் .பாராட்டுக்கள் .
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

  1. ஐயா, என் 'பூமிக்கூடு' கவிதை நூல் குறித்தான தங்களின் விமர்சனமும் வாழ்த்தும் நிச்சயம் எனக்கு பொக்கிஷம்தான் <3
    'குதிக்கும் கைக்குழந்தைகள்' என் முதல் கவிதை நூலுக்கு, தாங்கள் அஞ்சல் அட்டையில் விமர்சனமும் வாழ்த்தும் தெரிவித்தீர்கள் (2005). இன்னும் அந்த அஞ்சல் அட்டையை பத்திரமா வைத்திருக்கிறேன் <3
    'நையப்புடை' என் இரண்டாம் கவிதை நூலுக்கு, தாங்கள் விமர்சனமும் வாழ்த்தும் தெரிவித்தீர்கள் (2010)... தங்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு எனக்கு நெறைய அழைப்புகளும் பாராட்டுகளும்.. அகமகிழ்ந்தேன் <3
    தற்போது, என் 'பூமிக்கூடு' கவிதை நூலுக்கு, தாங்கள் விமர்சனமும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறீர்கள் (2016).. என் மகிழ்ச்சியை நன்றியை எப்படி சொல்வதென்று தெரியவில்லை <3 <3 <3
    தங்கள் விமர்சனத்தைப் படித்தாலே, நூலினைப் படித்த நிறைவு வந்துவிடும்... தங்களைப் போன்ற நல்லுள்ளம் படைத்தோரின் வாழ்த்தும் ஊக்கமும் எப்போதும் வேண்டும். எல்லோருக்கும்...
    அன்புடனும் நன்றியுடனும் பவகணேஷ் <3

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக