இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





இலக்கியத்தில் மேலாண்மை !
நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர்
முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.!
                             மின்னஞ்சல்  iraianbu@hotmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.  பேச : 044 26241288,
பக்கங்கள் : 596. விலை : ரூ. 1300
*****
      ‘இலக்கியத்தில் மேலாண்மை’ இந்த நூல் இறையன்பு அவர்களின் “MASTER PIECE” என்றால் மிகையன்று.  அவருடைய எல்லா நூல்களும் வாசகர்களை நல்வழிப்படுத்தும், செம்மைப்படுத்தும் நூல்கள் என்ற போதும், இந்நூல் ஆகச்சிறந்த நூலாக விளங்குகின்றது.

      இந்த நூலை படித்தவுடன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமலை அவர்கள், அவரைப் பாராட்ட வேண்டும், அவரது மின்அஞ்சல் தருக. என்று கேட்டுவிட்டு, "இறையன்பு அவர்களே நினைத்தாலும் இப்படி இன்னொரு நூலை இனி எழுத முடியாது மிகச் சிறப்பாக வந்துள்ளது ".என்றார்.

      சமுதாயத்திற்கு நன்மை தரும் பல நல்ல தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி விமலா அவர்கள் இந்நூலைப் படித்து விட்டு, படிக்கிறேன், படித்துக் கொண்டே இருக்கிறேன்.திரும்பத் திரும்ப படிக்கிறேன் " என்று பாராட்டினார்கள் .

      நூலின் அளவு மட்டுமல்ல, அதில் உள்ள கருத்துக்களும் பிரம்மாண்டம்.  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மிக நேர்த்தியாக, மிகக் கவனமாக பொருத்தமான வண்ணப்படங்களுடன் மிகச் சிறப்பாக பதிப்பித்து உள்ளனர், பாராட்டுகள்.

      இல்லத்தில் உள்ள நூலகத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும், கல்வி நிறுவனங்களின் நூலகங்களிலும் இடம்பெற வேண்டிய நூல்.  மேலாண்மை படிக்கும் முதுநிலை பட்டப்படிப்புக்கு பாட நூலாகவும் ஆக்கலாம்.  தகவல் சுரங்கமாக நூல் உள்ளது.

      இந்த நூல் படிப்பதற்கு முன் வெள்ளைக் காகிதமாக இருந்த நம் மனம் அச்சடிக்கப்பட்ட நூல் போல ஆகிவிடுகின்றது.  பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது.  திருவள்ளுவரை அறிந்திட்ட அறிஞர்கள் பலர், ஷேக்ஸ்பியரை அறிந்தது இல்லை.  ஆனால் நூலாசிரியர் இறையன்பு அவர்கள் "திருக்குறளில் மனிதவள மேம்பாடு "என்ற தலைப்பில் முதல் முனைவர் பட்டமும்,  திருவள்ளுவரையும், ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டு இரண்டாவது முனைவர் பட்டமும் , "கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி "என்ற தலைப்பில் கம்பரை மூன்றாவது முனைவர் பட்ட்த்திற்கும் ஆய்வு செய்தவர் என்ற காரணத்தால், மூவரையும் நன்கு உள்வாங்கி தேவையான இடங்களில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக வடித்துள்ளார். மூன்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எல்லோராலும் சாத்தியமாகாத சாதனை புரிந்தவர் .  

 அரசுப்பணியில் மிக நேர்மையுடன் பணிபுரிந்து கொண்டு தொலைக்காட்சிகளிலும் பேசிக்கொண்டு இது போன்ற நூல்களும் எழுதிக்கொண்டு நேரத்தை பயனுள்ள வகையில் மேலாண்மை செய்து மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்கள். நேர மேலாண்மை செய்து திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் மிக அமைதியாக பேச்சு ,எழுத்து இரண்டின் மூலம் நல்ல கருத்துக்களை மக்கள் மனங்களில் விதித்து வருகிறார்.

 இன்றைக்கு இளைஞர்கள் மாமனிதர் அப்துல் கலாமிற்கு அடுத்தபடியாக இறையன்பு அவர்களை நேசிக்கின்றனர். அதனால்தான்" இறையன்புவின் படைப்புலகம் "நூல்கள் வெளியீட்டு  விழாவிற்கு மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் நேரில் வந்து பாராட்டி சென்றார்கள் .தமிழகத்தில் பலர்  இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெறுவதற்கு நல்ல வழிகாட்டி பேருதவியாக இருந்து வருகிறார் .  

 இந்த ஒரு நூலிற்காக எத்தனை இலக்கிய நூல்கள் படித்திருப்பார் என்று எண்ணிப்பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.  சாகித்ய அகாதெமி நிறுவனம், எந்த ஒரு அரசியலும் இன்றி, நேர்மையான முறையில் தேர்வு செய்தால் இந்த நூலிற்கு சாகித்ய அகாதெமி விருது பெரும் தகுதி உள்ளது என்பதை நூல் வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் ஆமோதிப்பார்கள்.  விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.ஒருவேளை அவர்கள் தராவிட்டாலும் அது பற்றி அவர் கவலை கொள்ள மாட்டார் .

      திரு .கல்யாணராமன் அவர்களின் விரிவான அணிந்துரை நூலின் சிறப்பியல்பை திரைப்பட்த்தின் முன்னோட்டம் போல அழகாக வழங்கி உள்ளார்.  பாராட்டுகள்.  நூலில் 106 கட்டுரைகள் உள்ளன.  கம்ப இராமாயணம் மட்டுமல்ல வால்மீகி இராமாயணம், ஷேக்ஸ்பியரின் படைப்புகளும், சீன அறிஞர் கன்ஃபூ``சியஸ், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராசர், ஸ்டீபன் ஹாகின்ஸ், ஃப்ராங் அவுட்லா, கவியரசு கண்ணதாசன், ஜீவா, ஆப்ரகாம் லிங்கன், விவேகானந்தர், சிலப்பதிகாரம், கவிஞர் வைரமுத்து, இராமகிருஷ்ண பரமஹம்சர், கவிக்கோ அப்துல் ரகுமான், நெல்சன் மண்டேலா, லெனின், மணிமேகலை, கவிஞர் சிற்பி, பாலசுப்பிரமணியன், லால்பகதூர் சாஸ்திரி, இப்படி பல இலக்கியங்களும் பல தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.

 ஒரே ஒரு நூலில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், முந்தைய கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமகாலக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் கட்டுரைகளில் மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.

      நடிகர் ரஜினிகாந்த பேசும் புகழ்பெற்ற ஒரு வசனம் என் நினைவிற்கு வந்தது.  "ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி. " அது மாதிரி இந்த ஒரு நூல் படித்தால் நூறு நூல் படித்த மாதிரி.  நான் எழுதியது வெறும் புகழ்ச்சி அல்ல, வாங்கிப் படித்துப் பாருங்கள், நான் எழுதியது உண்மை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள்.

 இயந்திரமயமான உலகில் இன்றைக்கு நூல் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதே பலருக்கு சிரம்மாக உள்ளது. ‘இலக்கியத்தில் மேலாண்மை’  என்ற ஒரு நூல் படித்தால் போதும்.  நூறு நூல் படித்த திருப்தியும் மனமகிழ்ச்சியும் கிடைக்கும்.  நம்மை நாம் உயர்த்திக் கொள்ள உதவிடும் நூல்.  நம்மை நாம் செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் நூல்.

  எதிர்மறைக் கருத்துக்கள் எதுவுமின்றி நேர்மறைக் கருத்துக்களால் நிறைந்த நூல்.  உளவியல் ரீதியான பல உண்மைகளை உணர்த்திடும் நூல்.  மேலாணமை பதவிகளில் இருக்கும் உயர் அதிகார்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.  அலுவலக மேசையில் இந்நூலை வைத்துக்கொண்டு மேலாண்மை குறித்து ஏதேனும் ஐயம் வந்தால் எடுத்துப்படித்து தெளிவு பெறலாம்.  கட்டுரைகளின் தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன.

      மேலாண்மை என்பது எங்கும் எதிலும் நிறைந்து உள்ளது.  குப்பை லாரி என்று நாம் கேவலமாகப் பார்க்கும் வாகனத்தில் ‘திடக்கழிவு மேலாண்மை’ என்று எழுதி இருந்தார்கள்.  படித்து விட்டு வியந்தேன்.  உண்மை தான் குப்பையிலும் ஒரு மேலாண்மை உள்ளது.  கோபுரம் கட்டுவதிலும் ஒரு மேலாண்மை உள்ளது.  உலகம் வியக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைக் கட்டி எழுப்பியதும் ஒரு மேலாண்மை தான்.  தஞ்சை பெரிய் கோவிலைக் கட்டியதும் ஒரு மேலாண்மை தான்.  கரிகாலன் கல்லணை கட்டியதும், பென்னிகுக் அவர்கள் மேட்டூர் அணை கட்டியதும் ஒரு மேலாண்மை தான்.  எங்கும் எதிலும் பரவியுள்ள மேலாண்மை பற்றிய கருத்துக்களை சுவையான இலக்கிய விருந்தாக வைத்துள்ளார்கள்.  வேளாண்மை மேலாண்மை, வர்த்தக மேலாண்மை, நிருவாக மேலாண்மை, நேர மேலாண்மை, பணியைப் பகிர்தல், தகவல் பரிமாற்றம், உடல்மொழி, துணிவு மேலாண்மை, உணர்ச்கி மேலாண்மை, சமரசத்திறன், முடிவெடுக்கும் திறன், இப்படி பல்வேறு தலைப்புகளில் உள் தலைப்புகள் இட்டு மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள்.

      மனித வள மேம்பாடு பற்றியும் எழுதி உள்ளார்கள்.  மேலாண்மை குறித்து நமது இலக்கியங்களில் குறிப்பாக உலகப் பொதுமறையான திருக்குறளில் கொட்டிக் கிடப்பதை நமது தமிழர்கள் இன்னும் சரியாக உணரவில்லை.  இந்நூல் படித்தால் திருக்குறள் பற்றி புதிய பார்வை வாசகர்களுக்கு பிறக்கும் என்று உறுதி கூறலாம்.  மதுரையிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு இன்னும் திருமலை மன்னர் அரண்மனை பார்க்காத மனிதர்கள் உண்டு.  அது போல திருக்குறளில் உள்ள மேலாண்மை பற்றி அறியாத பலருக்கு கருத்துக்களை நன்கு உணர்த்தி உள்ளார்கள்.

      நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :
      “உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலாண்மைக் கருத்துக்கள் மென்மையாகப் பரவிக் கிடக்கின்றன”

      மென்மையான கருத்துக்களை மேன்மையாக எழுதி உள்ளார்.
      ‘எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில் தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது”
.
      உண்மை தான்.  சரியான முடிவை உரிய நேரத்தில் எடுக்காத்தால் வாழ்வில் தோற்றவர்களை நாம் பார்க்கிறோம்.

      “போட்டியாளர்கள் நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது மேலாண்மை விதி”

      போட்டியாளரை விட நாம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், போட்டியாளரின் உற்பத்திப் பொருளை விட தரமான பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வு வருவது இயல்பு.  அது தான் மேலாண்மை விதி என்கிறார்.

      “திருவள்ளுவர் துணிவு, ஈகை, அறிவுடைமை, ஊக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பவனே தலைமைப்பண்பு உடையவனாக இருக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார்.

      அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
      எஞ்சாமை வேந்தற்கு இயல்பு    (382).

      உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேலாண்மை பற்றி உயர்ந்த கருத்தை விளக்கத்தை சொல்லி உள்ளதை நூலில் பல இடங்களில் இன்னும் பல திருக்குறள்களை மேற்கோள் காட்டி எழுதி உள்ளார்.

      எழுதுவது மட்டுமல்ல நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சுற்றுலாத்துறையின் ஆணையராகவும், பின் செயலராகவும், வனத்துறையின் செயலராகவும் பணிபுரிந்து தற்போது முதன்மைச் செயலர் என்ற நிலைக்கு உயர்ந்து உள்ளார்.  சுற்றுலாத்துறையில் அவரது காலம் ‘பொற்காலம்’ என்றே சொல்ல வேண்டும்.  அவரது காலத்தில் செய்யப்பட்ட பணிகளை சுற்றுலாத்துறையில் துணை இயக்க்குனராக இருந்து ஓய்வு பெற்ற திரு. சா. சுப்பிரமணியன் அவர்கள் இணையத்தில் முழுவதும் ஆவணப்படுத்தி உள்ளார்.

  நூல் ஆசிரியர் இறையன்பு அவர்கள் மிகச்சிறந்த மேலாண்மை செய்து வருவதற்கு உரமாக இருந்தது இந்த நூலில் உள்ள கருத்துக்கள் என்றால் மிகையன்று.  உண்மை தான்.  இப்படி ஒரு நூலை திரு. இறையன்பு அவர்கள் நினைத்தாலும் இன்னொரு முறை எழுத முடியாது.

-- 

கருத்துகள்