சாகாவரம் ! ஆசிரியர் முதன்மைச் செயலர் ,முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி !



சாகாவரம் !

ஆசிரியர் முதன்மைச் செயலர் ,முது முனைவர்
வெ.இறையன்பு இ.ஆ.ப.

மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி !

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பாக சாகாவரம் நாவல் வந்துள்ளது. சாகாவரம் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நாவல் ஆசிரியர் முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்களின் இரண்டாவது நாவல் இது. ஆத்தங்கரை ஓரம் என்ற முதல் நாவல், பலத்த வரவேற்பைப் பெற்றது. பல்கலைக்கழக பாட நூலாக இடம் பெற்றது. கல்லூரி மாணவர்கள் பலர் ஆய்வு செய்தனர். எனவே நூலாசிரியரின் இரண்டாவது நாவல் குறித்து வாசகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. எத்தனையோ நாவல் படித்து இருந்தாலும், இந்த சாகாவரம் நாவல் படித்தது புதிய அனுபவம். இப்படி ஒரு தாக்கத்தை எந்த ஒரு நாவலும் ஏற்படுத்தவில்லை. படித்துப் பார்த்தால் உண்மையை நீங்களும் உணருவீர்கள்.நாவல் ஆசிரியர் பன்முக ஆற்றலாளர்.உரத்த சிந்தனையின் வெளிப்பாடே இந்த நாவல். மரணம் குறித்த பல்வேறு தாக்கங்களையும், அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றது. இறுதியில் தெளிவுபடுத்துகின்றது.

நம்மில் பலர் மனதிற்குள் கேட்டுக் கொண்ட கேள்வி தான் இது. நமக்கு மரணம் எப்போது வரும்? நம் மாணத்திற்கு பின் என்ன ஆவோம்? நம் மரணத்திற்கு யார் எப்படி அழுவார்கள்? எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? இப்படி பல்வேறு எண்ண அலைகள் எல்லோருடைய மனத்திலும் எழுவது உண்மை. இந்த நாவலின் கதாநாயகன் நசிகேதன் மனதை படம் பிடித்து காட்டுகின்றார் நாவல் ஆசிரியர். அவனது உற்ற நண்பர்களின் மரணத்தின் காரணமாக, 3 மாதத்தில் 3 நண்பர்கள் கபீர், பார்த்திபன், கோபி மரணம், 4 வது மாதத்தில் ரூப்குமார் மரணம், இப்படி தொடர் மரணம் நசிகேதனுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகின்றது. சிந்தை சிதைகின்றது. ஆறுதலுக்காக கொல்லிமலை பயணம் செல்கிறான். அச்சம் என்பது மடமையடா! ஆஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்பதின் விரிவாக்கமாக நாவல் உள்ளது.

கோபியின் திருமணத்தின் தாம்பூல் பையில் வில்லிபுத்தூர் பால்கோவா போட்டுத் தருகிறார்கள். அந்த பால்கோவா குளிர்சாதனப் பெட்டியில் உள்ளது. அந்த பால்கோவா உண்ணவில்லை, அதற்குள் கோபி இறந்து விட்ட செய்தி அறிந்து அதிர்ந்து போகிறான் நசிகேதன். இதனைப் படிக்கும் போது வாசகர்களும் அதிர்ந்து போகிறோம். இது தான் படைப்பாளியின் வெற்றி. இந்த நாவலைப் படிக்கும் போது ஒரு நாவல் படிக்கும் உணர்வே இல்லை. படிக்கும் வாசகனே கதையின் நாயகன் நசிதேகன் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மிக விறுவிறுப்பாக செல்கின்றது.

நூலின் ஆரம்பத்திலேயே உள்ள கல்வெட்டு வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

மரணத்தை புரிந்தவன் வென்றவனாகின்றான்

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை

பயம் கொள்ளாதவனுக்கு மரணமுமில்லை.

மரண பயமின்றி போராடி, உடலால் மறைந்தாலும் புகழால் நிலைத்து, மரணமில்லா பெருவாழ்வு வாழும் இலட்சிய மனிதர்கள் என் நினைவிற்கு வந்தனர்.

அழகாக வேரூன்றும் மரங்களே புயலில்

தடுமாறிச் சாய்கின்றன.

ஓடுகிற நதி ஓடிக்கொண்டேயிருக்குமா? ஓரு நாள்

வத்திப் போனா என்ன செய்ய முடியும்?

நகமும் சதையும் வெகு விரைவில் சாம்பலாவது

தான் வாழ்வின் சாரம் என்பதை அவனால்

ஏற்றுக் கொள்ள முடியவில்லை

நூலாசிரியர் பல்வேறு நூல்கள் படிக்கக்கூடிய சிறந்த வாசகர் என்பதால், இப்படி சிந்தனையை விதைக்கக் கூடிய சித்தாந்த கருத்துக்கள், ஜென் கருத்துக்கள், சித்தர் கருத்துக்கள் என கருத்துக்களின் களஞ்சியமாக உள்ளது நாவல். ஆன்மா சாவதில்லை, மற்றொரு பிறவியாக பிறக்கும் என்றால் இறப்பும் பிறப்பு எண்ணிக்கையில் ஏன்? வேறுபடுகின்றனது என்ற கேள்வியும் நாவலில் உள்ளது.

மரணம் என்பது வாழ்வுக்கான எதிர்மறையல்ல, ஆனால் அதற்குள் பழத்தின் கொட்டை போலத் தங்கும் அது அவசியம். பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும் போது, நாம் கொட்டையைச் சபிக்கிறோம். அந்த விதையால் தான் பழம் கிடைத்தது என்பதை உணராமல்.

பழம் பற்றி எழுதி, இப்படி எளிய உவமைகள் மூலம் உணர்த்துகின்றார் நாவல் ஆசிரியர். ஆனால் அதைப்பற்றியே சிந்தித்து, தினம் தினம் மரணம் அடையத் தேவை இல்லை. வாழ்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்பதை நன்கு உணர்த்துகின்றது நாவல். மொத்தத்தில் மரண பயம் நீக்கும் மருந்தாக உள்ளது. அஞ்சி அஞ்சி வாழ்பவர்களின் அச்சம் நீக்கும் விதமாக நாவல் உள்ளது. இந்த நாவலை திரைப்படமாகவோ, தொலைக்காட்சி தொடராகவோ எடுக்கலாம்.

கல்லூரியில் அடாவடித்தனம் செய்த, மாணவர்கள் தலைவனாக இருந்த பரமேஸ்வரன், பின்னர் பூர்ணானந்தா சாமியாராக மாறி போதனை செய்யும் நிகழ்வு நல்ல நகைச்சுவை மட்டுமல்ல, சாமியார்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்ற விழிப்புணர்வை விதைக்கின்றனது. கொல்லிமலையை நம் மனக்கண் முன் கொண்டு வந்து விடுகிறார். கொல்லிமலை பற்றி நூலாசிரியர் மொழியிலேயே காண்க.

கொல்லிமலை அதிகம் மனிதக்கால்களுக்கடியில் மாட்டாததால் இன்னும் கன்னித் தன்மையுடன் இருக்கிறது. நிறைய மூலிகைகள், அதிசய வனத் தாவரங்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையில் வீசிய காற்று அங்கு ஊடுருவிய போது அற்புதமான அனுபவமாக இருந்தது. உடலில் இருக்கும் உபாதைகள் கூட விலகி ஓடுவது போன்ற தெம்பு.

இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்மாக்கிக் கொண்டவன் மனிதன் மட்டுமே.

கொல்லிமலையை பார்க்காதவர்கள் உடன் சென்று பாருங்கள். ஒரு நாவலில் இவ்வளவு நுட்பமான தகவல்களை மிக இயல்பாக எழுதி உள்ளார். தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை வாசிக்க வாசிக்க சுகமாக உள்ளது. சுவையாகவும் உள்ளது. சிலர் நாவல் என்ற பெயரில் படிப்பினை இல்லாமல் நிகழ்வுகளை மட்டும் தொகுத்து எழுதி வரும் காலத்தில் ஒரு நாவலின் மூலம் வாசகர்களின் மனத்தில் நல்லதொரு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் விதைக்கும் விதமாக எழுதியுள்ள நாவல் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மனதிற்குள் மரணப் போராட்டம் நடத்துபவர்கள் அவசியம் வாங்கிப் படித்து தெளிய வேண்டிய நாவல். நாவல் படிப்பதற்கு என்று சிறிய வட்டம் உண்டு. அதையும் தாண்டி எல்லோரும் படிக்கக் கூடிய நாவலாக உள்ளது சாகாவரம். வுhசகர் உள்ளத்தில் சாகாவரம் பெற்று விடுகிறது.

கருத்துகள்