உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. தந்த தலைப்பு ! பாரதி தீ ! கவிஞர் இரா. இரவி !



உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. தந்த தலைப்பு !
பாரதி   தீ  ! கவிஞர் இரா. இரவி !

பாரதி நீ தான் நம்மை ஆண்ட
பரங்கியரின் கொட்டத்தைப் பாட்டுத் தீயால் அடக்கியவன்!
முண்டாசு கட்டிய மகாகவி பாரதி
மூட நம்பிக்கைகளை எரித்த பாட்டுத் தீ!
பாடிய படியே வாழ்ந்து காட்டியவன்
பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவன்!
செல்லமாளின் செல்லக் கோபத்திற்கு ஆளானவன்
செல்லமாக செல்லம்மாளை சீண்டி மகிழ்ந்தவன்!
பாடாத பொருள் இல்லை என்ற அளவிற்கு
பாடினான் அனைத்துப் பொருளிலும் தீயாக!
அச்சமில்லை அச்சமில்லை பாடிப் பாருங்கள்
அனைவரின் இதயத்திலும் வீரத் தீ பிடிக்கும்!
ஒடி விளையாடு பாப்பா என்றுஅவன்
ஒன்றும் தெரியாத குழந்தைக்கு அறிவுரை வழங்கியவன்!
வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டியவன்
வறுமைக்கு வருந்தாமல் வாழ்ந்து மகிழ்ந்தவன்!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாடியவன்
எதற்கும் அஞ்சாமல் துணிந்து நின்றவன்!
விடுதலை அடையும் முன்பாகவே தீர்க்கதரிசனமாக
விடுதலை அடைந்து விட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடியவன்!
கழுதைக் குட்டியை தோளில் சுமந்து சென்றவன்
காதில் வசவுகளை என்றும் போட்டுக் கொள்ளாதவன்!
இயற்கையை இனிதே ரசித்து வாழ்ந்தவன்
இயற்கையை உணர்ந்து பாடல்களில் வடித்தவன்!
தமிழை உயிருக்கு மேலாக மதித்தவன்
தமிழுக்கு மகுடத்தை பாட்டால் சூட்டியவன்!
பன்மொழி அறிஞன் பாராட்டினான் தமிழை பாரினில்
தமிழ்மொழிக்கு இணையான இனிமை மொழி இல்லை என்றான்
வள்ளுவர் இளங்கோ வரிசையில் இடம் பெற்றவன்
வண்டமிழ் செழிக்க கவிதைகள் யாத்தவன்
பாரதிக்கு இணையான கவிஞன் இல்லை
பாரதிக்கு இணை பாரதி மட்டுமே!
பாரதி ஒரு அக்னிக்குஞ்சு அவன் வைத்த தீ
பற்றி பரவி ஆங்கிலேயனைப் பொசுக்கியது!
விடுதலை எனும் வேள்வி எங்கும் நடந்தது
வேள்விக்கு விறகாக அரும்பாக்கள் அமைந்தது!
அறியாமை இருள் அகற்றும் சுடராக அவன் பாட்டு
அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதன் பாரதி!
பாரதியின் தமிழ்ப்பற்று அளவிட முடியாதது
பாரதியின் தமிழ் ஞானம் அளவிட முடியாதது!
புதிய புதிய சொற்களைப் படைத்தவன் பாரதி
பூபாளம் இசைத்து சொக்க வைத்தவன் பாரதி!
மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் நேசித்தவன் பாரதி
மனித நேயத்தை பாட்டில் விதைத்து வென்றவன் பாரதி!
கவிராசன் பட்டத்திற்கு பொருத்தமானவன் பாரதி
கவிதையின் ராசாவாக வலம் வந்தவன் பாரதி!
எட்டயபுரத்திற்கு பெருமைகள் சேர்த்தவன் பாரதி
எட்டப்பன்களைக் கண்டு என்றும் அஞ்சாதவன் பாரதி
புதுச்சேரிக்குச் சென்று புதுமைகள் வடித்தவன் பாரதி
புதுச்சேரிக்கு பெருமைகள் சேர்த்தவன் பாரதி!
சகலகலா வல்லவனாகத் திகழ்ந்தவன் பாரதி
சகலமும் கதை, கட்டுரை, கவிதை தீட்டியவன் பாரதி!
மீசை வைக்காத சமுதாயத்தில் பிறந்தவன் பாரதி
மீசையை தன் அடையாளம் ஆக்கியவன் பாரதி!
சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவன் பாரதி
சேதுபதி பள்ளிக்குப் பெருமை சேர்த்தவன் பாரதி!
விடுதலைக்காக வீரமுழக்கம் இட்டவன் பாரதி
விடுதலையின் அருமையை அருமையாக உணர்த்தியவன் பாரதி!
பெண் விடுதலைக்கு வித்திட்ட வேங்கை பாரதி
மண் விடுதலைக்கு பாட்டிசைத்த பாவலன் பாரதி
பெயரில் இருந்த ‘தி’ என்ற குறிலை
பாரதி நெடிலாக்கி தீ வளர்த்தவன் பாரதி!
கவிதையின் மூலம் கனல் பரப்பி
காட்டுத் தீயென பரவ விட்டு வென்ற தீ பாரதி!

கருத்துகள்