பன்முக நோக்கில் குறுந்தொகை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



பன்முக நோக்கில் குறுந்தொகை !

நூல் ஆசிரியர் : 
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை – 600 017.  பக்கம் : 252, விலை : ரூ. 160.  

பேச : 044-24342810  மின்னஞ்சல் : 
vanathipathippagam@gmail.com
******
      சங்க இலக்கியத்தில் மிகவும் கவர்ந்தது குறுந்தொகையே. அதனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு குறுந்தொகையின் மீது பெருங்காதல் என்றே சொல்ல வேண்டும். குறுந்தொகையைப் படித்ததோடு நில்லாமல் ஒப்பியல் ஆய்வுக்குச் செய்து வடித்த 40 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

      குறுந்தொகையில் உள்ள தமிழர்களின் பண்பாட்டை ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறியை, மனிதநேயத்தை, மலர்களின் பாசத்தை, விலங்கபிமானத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.  பல்வேறு கோணங்களில் குறுந்தொகையை ஆய்வு செய்துள்ளார்.

      முதல் கட்டுரையே முத்திரை பதிக்கும் கட்டுரையாக முத்தாய்ப்பாக உள்ளது பாருங்கள்.

      முதல் கட்டுரையே முத்திரை பதிக்கும் கட்டுரையே முத்தாய்ப்பாக உள்ளது பாருங்கள்.

      “நயமும் நுட்பமும் துலங்கும் குறுந்தொகையின்
      முதற்பாடல்”

      “காதலையும் அதன் நுட்பமான மன வேறுபாடுகளையும் இவ்வளவு திறமையுடன் பாகுபடுத்துவதில் உலக இலக்கியத்தில் தமிழ் முதலிடம் வகிக்கிறது” – சுஜாதா.  "

      ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அக்கட்டுரைக்குப் பொருத்தமான மெற்கோள்களுடன் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி ஆகும். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் முத்தாய்ப்பாக எழுதியுள்ள முடிவுரை நயவுரை.

      “அன்புப்பரிசீலனை நல்கிஆடவர் முன்மொழியும் காதலைப் பெண்கள் உடனடியாக எளிதில் ஏற்றுக் கொண்டுவிடக்கூடாது” என்பதை நாகரிகமாகவும் குறிப்பாகவும் உணர்த்தும் ஆகிய பழந்தமிழ்ப் பாடல் இது.

இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து – செய்தி – இன்றைய கணினி யுகத்தின் காதலுக்கும் ஏற்புடையதே ஆகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடலை இக்காலத்துப் பொருத்திப் பார்த்த இலக்கியப் பார்வை நன்று.

குறுந்தொகை எனும் பலாப்பழத்தை பக்குவமாக கையில் அனுபவம் என்ற எண்ணெய் தடவி பல உரைகள் படித்த அனுபவம் என்ற கத்தி கொண்டு நறுக்கி இனிக்கும் பலாச்சுளைகளாக வழங்கி உள்ள பாங்கு மிக நன்று.

குறுந்தொகை படிக்கும் போது முட்கள் உள்ள பலா போலவே இருக்கும். இந்நூல் மூலம் பொருள் புரிந்து படிக்கும் போது பலாச்சுளையாகவே இனிக்கும்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பேராசிரியர்கள், துணைத் தலைவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். முதுகலை தமிழ் இலக்கியத்திற்கு இந்நூலை பாடமாகவும் வைக்கலாம். அத்தகைய தகுதி இந்நூலுக்கு உண்டு.

காதலர்களிடையே புகழ்பெற்ற பாடலான
      யாயும் ஞாயும் யாராகியரோ?

பாடல் விளக்கமும் ஒப்பீடுகளும் மேற்கோள்களும் மிக நன்று.  பாராட்டுக்கள்.  எழுத்தாளர் சுஜாதா தொடங்கி தமிழறிஞர்கள் தமிழண்ணல், இரா. சாரங்கபாணி, சிலம்பொலி செல்லப்பன், தனிநாயக அடிகளார், வையாபுரி பிள்ளை, அ. பாண்டுரங்கன், மனோன்மணி சண்முகநாதன், ச. அகத்தியலிங்கம், தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, தெ. ஞானசுந்தரம், மொ.அ.துரை. ரங்கசாமி, அரங்க இராமலிங்கம், க. பஞ்சாங்கம், கவிக்கோ அப்துல் ரகுமான், ரா. செல்வநாயகம், வைரமுத்து அவர்களின்ஆசிரியர் பேராசிரியர் இராம. குருநாதன், இன்றைய இலக்கிய விமர்சகரான 
ந. முருகேசபாண்டியன் வரை இவர்கள் சங்க இலக்கியம் பற்றி உரைத்த நல்கருத்துக்களை ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் எழுதி இருப்பது சிறப்பு.  கட்டுரையை படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விடுகின்றன.

      சங்க இலக்கியத்தின் மகுடமான குறுந்தொகையில் வரும் பாடல்களில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழியின் கூற்று இவை அனைத்தும் வாழ்வியல் இலக்கணம் கற்பிக்கும் விதமாய் உள்ளன.

      கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை தொடர்ந்து வருவது காதல். மனித குலத்தின் இனிய உணர்வு காதல். வயப்பட்டவர்கள் மட்டுமே உணரும் அற்புத உணர்வு காதல். காதல் ரசம் சொட்டச் சொட்ட குறுந்தொகைப் பாடல்களின் விளக்கம் தந்துள்ள நடை மிக அருமை.

      “சங்கப் பெண்பாற் புலவரான கச்சிப் பேட்டு நன்னாகையாடும் தம் பாடல்களில் தலைவரைப் பிரிந்து வாடும் தலைவியரின் ஆற்றாமை உணர்வுகளுக்கும் பெண்களுக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவங்களுக்குமே அழுத்தமும் முதன்மையும் தந்து பாடி இருப்பது இவ்வகையில் ஓய்வு நோக்கத்தக்கது”

      பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்புலவர்கள் காதலைப் பற்றி, பிரிவைப் பற்றி மிக மிக நுட்பமாக பாடல் பாடி உள்ளனர்.  அன்று இருந்த பெண் விடுதலை கூட இன்று இல்லை என்பதே உண்மை. சங்க காலத்தில் 30க்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்து உள்ளனர். 

 இன்று பெண் கவிஞர்கள் மிகக்குறைவாக உள்ளனர்.  பெருக வேண்டும், சில பெண் கவிஞர்கள் திருமணமானதும் எழுதுவதையே நிறுத்தி வருகின்றனர்.  இந்நிலை மாற வேண்டும். இப்படி பல சிந்தனைகளை எழுப்பியது இந்நூல்.

      பரணர் பாடிய குறுந்தொகைப் பாடல் வரலாற்று மாந்தர்கள் பற்றி புகழ்ந்து பாடி உள்ளார். வரலாற்று நிகழ்வுகள் பற்றி பாடி உள்ளார். இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.

      ஆண்மை என்றால் ஆண்களுக்கு உரியது என்று எண்ணுகின்றோம்.  ஆனால் ஆண்மை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உரியது என்கிறார். ஆடவர் உளவியல் காதல் பற்றிய கருத்து உள்ளது.

      “ஆண்மகனின் காதல் ஆர்வம் தவறன்று.  தருவதே எனினும் அவனது ஆர்வ மிகுதியில் காலப்போக்கில் தொய்வு ஏற்படுகிறது”.

      உண்மை தான். காதலில் பெண்னின் அளவிற்கு ஆணின் காதல் நீடித்து இருப்பதில்லை என்ற ஆண்மகனின் உளவியலைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனையும் மேற்கோள் காட்டி உள்ளார்.  காதல் திருமணங்கள் சில தோல்வியில் முடிவதற்கு இந்த உளவியலே காரணமாகின்றது.

      “கற்பவர்களைச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்!” குறுந்தொகையில் உள்ள பாடல்கள்.  கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதலோவியங்கள் குறுந்தொகைப் பாடல்கள்.  காதல் வாழ்க்கையின் பல்வேறு வேறுபாடுகளையும், காதலர்களின் உள்ளக்கிடக்கையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறிக் கற்பவர்களச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்” முனைவர் இர. பிரபாகரன் கருத்து.  

நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தன் பார்வையோடு நின்று விடாமல் பலரின் பார்வையையும் மேற்கோள் காட்டி ஒப்பீடு செய்த விதம் அருமை. இன்றைய காதலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல். பாராட்டுக்கள்.

கருத்துகள்