அறம் ! இயக்குனர் ந.கோபி நயினார் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !




அறம் !

இயக்குனர் ந.கோபி நயினார் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தாமதமான விமர்சனத்திற்கு முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். நான் திரையரங்கில் படம் பார்த்துதான் விமர்சனம் எழுதுவது வழக்கம் .பல்வேறு பணிகள் காரணமாக சென்று பார்க்க தாமதமாகி விட்டது .அலைபேசியிலோ கணினியில் எந்த திரைப்படமும்   நான் பார்ப்பதில்லை .இதுவும் ஒரு அறம்தான் .

நேர்மைக்காக பாராட்டப்பட்ட நீதியரசர் சிவக்குமார் அவர்கள் இந்தப்படத்தைப் பார்த்து விட்டு என்னையும் பாருங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள் . அறம் குழுவினருக்கு பாராட்டு விழா மதுரையில் நடக்கும் செய்தி அறிந்து உடன் சென்று படம் பார்த்தேன். விழாவிற்கு நேரில் சென்று பொன்னாடைப் போர்த்தி இயக்குனரை பாராட்டினேன் .

அத்தி  பூத்தது போல ,குறிஞ்சி மலர்வது போல எப்போதாவதுதான் நல்ல திரைப்படம் வருகின்றன .அந்த வரிசையில் வந்துள்ள நல்ல படம் .படத்தின் தலைப்பிற்கு ஏற்றபடி அறம் பேசும் படம் .அறம் என்றால் என்ன ? மனிதாபிமானம் ஏழையின் உயிரையும்  மதிப்பது. ஆழ் குழாய் பள்ளத்தில் குழந்தை விழுந்து விடுகின்றது. அக்குழந்தையைப் போராடி உயிருடன் மீட்ட ஒருவரிக் கதையை மிக நுட்பமாக வழங்கி உள்ளார் .

கோடிகள் செலவழித்து வெளிநாடுகள் சென்று படம் எடுப்பவர்களும், வெட்டுக் குத்து ,குத்துப் பாட்டு ,துப்பாக்கிச் சூடு காட்சிகள் வைத்து, இல்லாத பேயை இருப்பதாகக் காட்டும் மசாலாப்பட இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம். இந்தப்படத்தில் கதாநாயகன் இல்லை .கதாநாயகன் துதி பாடும் பாடல்கள் இல்லை .மசாலா இல்லாமலே வெற்றி பெற்றுள்ளது படம்.

நேர்மையான மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .அரசியல்வாதிகள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகியோரின் மிரட்டலுக்கு அடிபணியாமல், ஆழ்குழாய் கிணறு தோண்டி மூடாமல் வைத்து விபத்துக்கு காரணமான மாமன்ற உறுப்பினரை கைது செய்கிறார் .

அமைச்சர் சொல்கிறார் "மாமன்ற உறுப்பினர் என் வீட்டில் தான் இருக்கிறார் .முடிந்தால் கைது செய் "என்கிறார் .அப்படி சொல்லியும் கைது செய்ய ஆணையிட்டு கைது செய்கிறார் .நெஞ்சுரம் மிக்க மாவட்ட ஆட்சியராக நயன்தாரா மிளிர்கிறார் .

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக ,கிராம அலுவலர் ,வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ,தீ அணைப்புத் துறை ,மருத்துவர் அனைவரையும் விபத்து நடந்த இடத்திற்கு வரவழைத்து தானும் நேரில் சென்று கவனிக்கிறார் .

சட்டமன்ற உறுப்பினர் வந்து மிரட்டியபோதும் பொருட்படுத்தாமல் விழுந்த  பெண் குழந்தையின் சகோதரன்  சிறுவன் நீச்சல் வீரன். அவனது  உடலில் கயிறு கட்டி பள்ளத்தில் இறக்கி சிறுமியை உயிருடன் மீட்கிறார் .குழந்தை உயிருடன் வந்த பிறகுதான் படம் பார்க்கும் நமக்கும் நிம்மதி வருகின்றது .அதுவரை பரபரப்பு  நம்மிடம் உள்ளது .

இந்தப்படம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கு ஜால்ராப் போடும் அதிகாரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் மிக நல்ல படம் .

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு விட்டது .காரணமானவரைக்  கைது செய்து விட்டனர் .மாவட்ட ஆட்சியரின் வெற்றியைப் பாராட்ட மனமின்றி ,அவர் மீது விசாரணை அமைத்து உயர் அலுவலர் விசாரிக்கிறார் .இன்றைய நாட்டு நடப்பை அரசியல்வாதிகள் ஆதிக்கத்தை அப்படியே காட்டி உள்ளார் .

ஆனால் மாவட்ட ஆட்சியர் என்பவர் மாவட்டத்தின் முதல் நீதியரசர் அவருக்கு அணைத்து அதிகாரமும் உண்டு .நல்ல  செயலுக்கு தாராளமாக தன் அதிகாரத்தை பயன்படுத்தலாம் . தண்ணி இன்றி தவிக்கும் கிராமத்து மக்களுக்கு தண்ணீர் வண்டியை எப்படி அனுப்பினீர்கள் என்றும் .மற்றொரு குழந்தையை எப்படி பள்ளத்தில் இறக்கலாம் என்று உயர் அலுவலர் பல கேள்விகள் கேட்கிறார். இந்தக் கேள்விகளே தவறு .

எல்லா அதிகாரமும் உண்டு .ஆனால் உயர் அலுவலர் கடைசியாக அமைச்சரிடம் பேசுங்கள் சமரசம்  ஆகுங்கள் .என்று சொன்னபோதும் மறுத்து விடும் நெஞ்சுரம் போற்றத்  தக்கது . விசாரணைக்கு வரும் உயர் அலுவலரும் அரசியல்வாதிகளின் ஜால்ராவாக உள்ளார் என்பதை காட்டிய விதம் அருமை .

குழந்தை பள்ளத்தில் விழுந்ததும் தவிக்கும் அப்பா, அம்மா ,கிராம மக்கள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .படம் பார்க்கிறோம் என்பதை மறந்து நேரில் பார்க்கும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் .

நம் நாட்டில் கோடிகள் பல செலவழித்து ஏவுகணைகள் ஏவுகின்றனர். ஆனால் ஆழ் குழாய் கிணற்றில் விழுந்த குழ்நதைகளை மீட்க கயிறு தவிர வேறு கருவி இல்லையே ஏன்  என்ற கேள்வியை உரக்க எழுப்பி உள்ளார் .

முடிவில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுப்போன்ற முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை .ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியரை மக்கள் ஆதரித்தால் அவர் அரசியலுக்கு வராமல்  ஆட்சியர் பதவியிலேயே மக்களுக்கு நன்மைகள் செய்ய முடியும் .அதுதான் அறம் .

கருத்துகள்