ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !






ஹைக்கூ  உலா ! 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !

“கவிதை எழுதுபவன் கவியன்று ; கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி ... படிப்பவனுடைய அனுபவத்திற்கு தக்கபடி அதில் இருந்து நூறு வகையான மறைபொருள் போன்றும் ... கேட்பவன் உள்ளத்திலே கவிதை உணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை” (மகாகவி பாரதியார் கட்டுரைகள், பக்.217, 218-219) என உண்மைக் கவிஞனுக்கும் சிறந்த கவிதைக்கும் வரைவிலக்கணம் வகுப்பார் கவியரசர் பாரதியார். அவரது அமுத மொழிக்கு இணங்க, ‘ஹைகூவே வாழ்க்கையாக உடையவர், வாழ்க்கையே ஹைகூவாகச் செய்து வருபவர் இரா. இரவி
எனலாம்.  படிப்பவர் உள்ளத்திலே கவிதை உணர்வை எழுப்பி விடும் சிறந்த ஹைகூ கவிதைகளை எழுதும் வல்லமை படைத்தவர் அவர்.  இதுவரை விழிகளில், உள்ளத்தில், நெஞ்சத்தில், இதயத்தில், மனத்தில் ஹைகூ கவிதைகளை ஏந்தி இருந்த இரவி, ஹைகூ கவிதையை வாசகரிடம் ஆற்றுப்படுத்தியும், ‘ஹைகூ முதற்றே உலகு என முழங்கியும், ஆயிரம் ஹைகூ கவிதைகளைப் படைத்துச் சாதனை புரிந்தும் வந்த இரவி, இப்போது ஹைகூ கவிதைகளை உலா வருமாறு செய்திருக்கிறார்.
கவிஞரின் தெறிப்பான கேள்வி :
      “தருமத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும் ;
      தருமம் மறுபடி வெல்லும்”        (பாரதியார் கவிதைகள் ப.389)
என்னும் பாரதியாரின் வரிகளே இந்நூற்றாண்டில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அடிக்கடி மேற்கொள் காட்டும் வரிகளாக இருக்கும்!  ‘பாட்டுக்கொரு புலவர்’ பாரதியாரின் இந்த வரிகளையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் இரவி.
      “இறுதியில் வெல்லும் சரி
      இடையில் ஏன் தோற்கிறது
      தர்மம்?”
என்பது இரவி தம் ஹைகூ கவிதை ஒன்றில் முன்வைக்கும் பொருள் பொதிந்த வினா, தருமம் தான் இறுதியில் வெல்லும், சரி ; அதிலே ஒன்றும் கருத்து வேறுபாடு இல்லை. இடையில் ஏன் தர்மம் தோற்கிறது? ஏன் அதைத் தோற்க விட வேண்டும்? நல்லவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் தருமத்திற்கு இந்தக் கதி நேருமா? இது தான் இரவியின் தெறிப்பான கேள்வி.
      “நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் – மீதம்
      உள்ளவரின் நிலை என்ன மச்சான்?
      நாளை நடப்பதை எண்ணி எண்ணி – அவர்
      நாழிக்கு நாழி தெளிவாரடி!”
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ப.116)
என்னும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் இங்கு நினைவுகூறத்-தக்கன.
வானத்தை ரசியுங்கள்!
      “ஏட்டுக் கல்வியை விடப் பலவகையிலும் சிறந்தது இயற்கைக் கல்வி” என்பதை உணர்த்தும் ஜென் கதை :
      “மாணவர்கள் பேச்சடங்கி அமைதியாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்”.
      பரிபூரணமான அமைதி அங்கே நிலவியது.
      அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு பறவை, அந்த மௌனத்தைக் கலைத்த படி, கீச்சிட்டுக் கூவியது.
      அது எல்லோருடைய காதிலும் விழுந்தது
      அதைக் குரு கவனித்தார்.
      ‘அவ்வளவு தான், இன்றைய பாடம் முடிந்தது’ என்று கூறி விட்டு, எழுந்து போய் விட்டார்.  (புவியரசு, ஜென் கதைகள், ப.77).
      இயற்கையிடம் இருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன.  பாவேந்தர் பாரதிதாசனும் ‘அழகின் சிரிப்பில்’
      “எத்தனை பெரிய வானம்!
            எண்ணிப் பார் உனையும் நீயே;
      இக்கதை, கொய்யாப் பிஞ்சு ;
            நீ அதில் சிற்றெரும்பே ; ...
      பித்தேறி மேல்கீழ் என்று
            மக்கள் தாம் பேசல் என்னே!”     (அழகின் சிரிப்பு, ப.37)
என வானம் கற்பிக்கும் வாழ்வியல் பாடத்தினை எடுத்துரைப்பார்.
      இயற்கையிடம் இருந்து குறிப்பாக, வானத்திடம் இருந்து – பாடம் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, இயற்கையை, மனமார ரசிக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள் என்கின்றார் இரவி. அவரது ஹைகூ ஒன்று இவ்வகையில் மனங்கொள்ளத்தக்கது.
      “ஒவ்வொரு நேரமும்
      ஒவ்வொரு வண்ணம்
      ரசியுங்கள் வானம்!”
சாதி, மத வேறுபாடுகளுக்குச் சாவுமணி அடித்த பேரிடர்கள் :
      “சாதி இல்லை, மதம் இல்லை” என்று தனது உதடுகள் உச்சரித்தாலும், மனிதன் மறைவாகத் தனது உள்ளத்துக்குள்ளே சாதியையும் மதத்தையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றார். ஆழிப் பேரலை, நில நடுக்கம், தீ விபத்து முதலான இயற்கைப் பேரிடர்கள் எதிர்பாராமல் தாக்கும் போது தான் மனிதன் தனது சாதியையும், மதத்தையும் மறந்து, மனித நேயத்தோடு நடந்து கொள்கின்றான். அங்கே தான் – அப்போது தான் – சாதி, மத வேறுபாடுகள் செத்துப் போய், மனிதநேயம் மனிதனின் மனத்தில் தளிர்க்கின்றது.  இதனை இரவி தம் ஹைகூ ஒன்றில் அழகுறப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
      “செத்துப் போனது
      சாதி மத பேதம்
      மழை வெள்ளம்!”
      சாதி, மத வேறுபாடுகளை அறவே துறந்து, மனித குலம் ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் காட்டிய வழியில் மனித நேயத்திற்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் முதன்மை தந்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே இரவி தமது ஒட்டுமொத்த ஹைகூ கவிதைகள் வாயிலாக உணர்த்த விரும்பும் பாவிதம் ஆகும்.
‘கைகளில் உள்ளது எதிர்காலம்!’
      ‘சொத்துக்களில்
      சிறந்த சொத்து
      தன்னம்பிக்கை!’
என அறுதியிட்டு உரைக்கும் இரவி – தம் ஹைகூ கவிதைகளில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் தன்னம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றார் ; முயற்சியின் பெருமையை வானளாவப் பேசுகின்றார் ;
      “கைரேகையில் இல்லை
      கைகளில் உள்ளது
      எதிர்காலம்!”
என்பது இளைய தலைமுறைக்கு இரவி விடுக்கும் செய்தி ஆகும்.
      ‘செய்யும் தொழிலே தெய்வம் – அதில்
            திறமை தான் நமது தெய்வம் ;
      கையும் காலும் தான் உதவி – கொண்ட
            கடமை தான் நமக்குப் பதவி”
                  (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ப.72)
என்றும் மக்கள் கவிஞர் ப(பா)ட்டுக்கோட்டையாரின் வைர வரிகள் இங்கே ஒப்புநோக்கத்தக்கவை.
      “இவன்
      ரேகைகளை
      நம்பாதவன்
      ரேகை தேயத் தேய
      உழைத்தவன்
      என்று சொல்லுங்கள்” (இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, ப.188).
என ‘உயில்’ என்னும் கவிதையில் கவிப்பேரரசு வைரமுத்து தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் ஈண்டுக் கருதத்தக்கது.
உடன்பாட்டுச் சிந்தனையின் உயர்வு :
      எதையும் உடன்பாடாகக் காண்போரின் மனத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் என்றென்றும் குடியிருக்கும். இத்தகைய மனப்போக்கு கொண்டவர்கள் பாரதியாரைப் போல், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள் இறைவா, இறைவா, இறைவா!’ என்றே முழங்குங்கள் ; ‘உலகம் பொல்லாதது’ என்று நினைக்காமல், உலகின் இயல்பினை உள்ளபடி உணர்ந்து, அதில் இனிமையைக் காண்பவர்கள் ; இன்பம் துன்பம் இரண்டையும் இயல்பாக, சமமாக எடுத்துக் கொள்ளுங்கள் ; ‘இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி’ எனக் கருதிக் கொள்வார்கள்.
      “அருகே முள்
      ஆனாலும் மகிழ்ச்சி
      ரோசா”
என்னும் இரவியின் ஹைகூ உடன்பாட்டுச் சிந்தனையின் அழகிய வெளிப்பாடு ஆகும்.  ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது என்றாலும், வாடி நின்றால் ஓடுவது இல்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்’ (திரை இசைப் பாடல்கள் ; இரண்டாவது தொகுதி, ப. 324) என்னும் கவியரசர் கண்ணதாசனின் முத்திரைப் பாடல் வரிகளும் இந்த உண்மையைத் தானே உணர்ந்து நிற்கின்றன.
வாழ்க்கையைத் திருவிழா போல கொண்டாடி மகிழ வேண்டும்!
      இரவியின் அகராதியில் ‘சராசரி வாழ்க்கை’ தோற்றம் மறைவோடு / முடிந்து விடுகிறது’.  சாதனையாளர்களின் வாழ்க்கையோ வறிதே ‘வந்து சொல்வதாக’ இல்லாமல், சமுதாயத்திற்கு உலகத்திற்கு எதையாவது ‘தந்து செல்வதாக’ அமைகின்றது.  ‘வாய்த்தது ஓர் மனிதப் பிறவி ; இதை மதித்திடுமின்’ என்பது அப்பர் சுவாமிகளின் குருவாக்கு.  அதனை வழிமொழிவது போல்,
      “கொண்டாடு
      திருவிழா போல
      வாழ்க்கை!”
எனப் பாடுகின்றார் இரவி, ‘வாழ்க்கையில் ஒவ்வோர் அடியையும் கருத்துடன் எடுத்து வைத்து, ஒவ்வொரு நொடியையும் செவ்வனெ பயன்படுத்தி வாழ்ந்து காட்டி, திருவிழா போல கொண்டாடி மகிழ் வேண்டும்’ என்பது இரவியின் அழுத்தம் திருத்தமான கருத்து.
வாடிவாசல் வெற்றிக்கு வரவேற்பு
      தமிழ் மொழியின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் ஆழ்ந்த பற்று உடையவர் இரவி. “என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில் – ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்மொழியை?” என்னும் அவரது ஹைகூ தடம் பதித்த ஒன்று.  பிறிதொரு ஹைகூ கவிதையில் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?’ என வெறுப்புறக் கேட்பார் அவர்.
      “ஓரடி ஆத்தி சூடி
      ஈரடி திருக்குறள்
      மூவடி ஹைக்கூ!”
என ஒரே ஹைகூ கவிதையில் மூன்று முத்தான தமிழ் இலக்கிய வடிவங்களைச் சுட்டும் இரவி,
      “ஒரே வரியில்
      ஒப்பற்ற அறம்
      ஆத்திசூடி!”
      “தமிழின் கருவூலம்
      தமிழரின் அடையாளம்
      திருக்குறள்!”
      “காரம் மிக்க
      கடுகு
      ஹைக்கூ!”
எனத் தனித்தனி ஹைகூ கவிதைகளிலும் அவற்றிற்குப் புகழாரம் சூட்டுவார்.
      “தினம்
      ஒரு வரி தான் படிக்க முடியும்
      என்றால்
      ஆத்திசூடி படி ;
      தினம்
      இரு வரிகள் தான் படிக்க முடியும்
      என்றால்
      திருக்குறள் படி ;
      தினமும்
      மூவரிகள் தான் படிக்க முடியும்
      என்றால்
      ஹைக்கூ படி ;
      தினம்
      நாலு வரிகள் தான் படிக்க முடியும்
      என்றால்
      நாலடியார் படி.
      “படிக்கவே முடியாது என்றால்
      எப்படி?”                            (புத்தகம் என்பது .... ப.32)
என்னும் ஈரோடு தமிழன்பனின் கவிதை இங்கே கருத்தில் கொள்ளத்தக்கது.
      “தமிழன் என்று சொல்லடா
      தலை நிமிர்ந்து நில்லடா
      வாடிவாசல் வென்றதடா!”
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைய தலைமுறை கண்ட எழுச்சிமிகு வெற்றிக்கும் வரவேற்புப் பா இசைத்துள்ளார் இரவி,
சமூக, பொருளாதார, அரசியல் பதிவுகள்
      நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் இன்றைய சமூக, பொருளாதார், அரசியல் அவலங்களையும் நாட்டு நடப்புக்களையும் சாடுவது ஒரு தமிழ் ஹைகூ கவிஞர் என்ற முறையில் இரவியின் தூக்கலாகக் காணப் பெறும் ஆளுமைப் பண்பு ஆகும், பதச்சோறு ஒன்று :
      “வருமானம் அல்ல
      அவமானம்
      மதுக்கடை!”
‘மனிதனாகச் சாதிக்க விரும்புவோர் மதுவை அறவே விலக்க வேண்டும்’ என்பது இரவியின் அழுத்தமான கருத்து.
      தேர்தல் காலத்தில் கட்டை விரலில் மை பூசுவதற்கு இரவு சுட்டும் காரணம் சுவையானது :
      “முகத்தில் கரி பூசி
      ஏமாற்றுவதற்கு முன்னோட்டம்
      விரலில் மை!”
இன்று சட்டசபை என்பது அடிதடியும் ஆரவாரமும், சண்டையும், சச்சரவும், கைகலப்பும் அரங்கேறும் குருக்ஷேத்ரம் ஆகி விட்டது.  எனவே ‘சட்டசபை’ என்ற பெயரை ‘சத்த சபை’ என மாற்றி வைக்கலாம் என்கிறார் இரவி.
      “பெயர் மாற்றம்
      சட்ட சபை
      சத்த சபை!”
இரவியைப் பொறுத்த வரையில்,
      “வன்முறை
      தீர்வன்று
      தீங்கு!”                                         ஆகும்.
      நமக்குத் தொழில் கவிதை ;
      நாட்டிற்கு உழைத்தல் ;
      இமைப்பொழுதும் சோராது இருத்தல்” 
(பாரதியார் கவிதைகள், ப.16).
என்னும் கவியரசர் பாரதியாரின் வாக்கிற்கு இணங்க, முனைப்புடன் இயங்கியும், எழுதியும், பேசியும், வாழ்ந்தும் வரும் கெழுதகை நண்பர் இரா. இரவிக்கு எதிர்காலத்தில் இன்னும் பல உயர்வுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் விருதுகளும் வந்து சேர வேண்டும் என உளமார வாழ்த்துகின்றேன்!

கருத்துகள்