பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



பன்முக நோக்கில் புறநானூறு!
நூல் ஆசிரியர் :
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. 
பக்கம் : 160, விலை : ரூ. 160
******
      வானதி பதிப்பகம், தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் வெற்றிக் கூட்டணியாகி விட்டது.  தொடர்ந்து இலக்கிய விருந்து வைக்கும் நூல்களாக வந்து கொண்டே இருக்கின்றன.  அந்த வரிசையில் “பன்முக நோக்கில் புறநானூறு” என்ற நூலும் வந்துள்ளது.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
      நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு சங்க இலக்கியம் பற்றி எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுவது போலாகும்.  வாசகர்களுக்கும் சங்க இலக்கிய அல்வாவை பகிர்ந்து உள்ளார்.  இந்நூல் படிக்கும் வரை புறநானூறு என்பது புரியாத நானூறாகவே இருந்தது எனக்கு.  எல்லோருக்கும் புரியும்படி மிக எளிமையாகவும், இனிமையாகவும் சுவையாகவும் எழுதி உள்ளார்.  40 தலைப்புகளில் 40 கட்டுரைகளாக வழங்கி உள்ளார்.  பன்முக நோக்கு 10 கட்டுரைகள், வாழ்க்கை வெளிச்சங்கள் 10 கட்டுரைகள், சான்றோர் அலைவரிசை 6 கட்டுரைகள், கண்ணீர் ஓவியங்கள் 5 கட்டுரைகள். உரை வளமும் பா நலமும் 9 கட்டுரைகள் என 5 பிரிவுகளாக உள்ளன.
      அமெரிக்கா மேரிலாந்தில் வாழும் முனைவர் இர. பிரபாகரன் அவர்களின் விளக்கமான அணிந்துரை நூலின் சிறப்பைப் பறைசாற்றுவதாக, தோரண வாயிலாக, முத்தாய்ப்பாக உள்ளது.  புலம் பெயர்ந்த தமிழரின் இலக்கிய ஈடுபாட்டை உணர முடிந்தது.
அணிந்துரையில் இருந்து சிறு துளிகள் இதோ!
      “அரிய கருத்துக்கள் நிறைந்து விளங்கும் இந்நூல், தமிழர்களிடத்தில் புறநானூற்றைப் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று எண்ணுகிறேன். பேராசிரிய மோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்."
  உண்மை தான். புறநானூறு மீதான ஈடுபாட்டை, ஈர்ப்பை உருவாக்கும் விதமாக வடித்துள்ளார்கள்.  தமிழன்னைக்க்கு அழகிய அணிகலன் ஒன்றை இந்நூலின் மூலம் அணிவித்து உள்ளார்.  வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்த்திடும் நூல்.
  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைந்தமிழில் எழுதியுள்ள கருத்துக்கள், ஆளுமைகள், விழுமியங்கள், உயர்ந்த சிந்தனைகள், உலகப்பொதுமை என புறநானூற்றில் உள்ள ஆகச் சிறந்த கருத்துக்களை ஆராய்ந்து அறிந்து இலக்கிய விருந்து வைத்துள்ளார். நூலில் இருந்து சிறு துளிகள்.
      “பழுத்த மரங்களை நாடிப் பறவைகள் செல்லுவது போல,
      வள்ளன்மை வாய்ந்த மன்னர்களை நாடிப் புலவர்கள்   செல்வார்கள்”
      மன்னர்கள் புலவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கி இலக்கியத்தை வளர்த்த வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக பாடல்கள் உள்ளன.  மன்னர்களும் வள்ளல்களாக விளங்கினர் என்பதை உணர்த்துகின்றது.
      புறநானூற்றுப் பாடல்களோடு திருக்குறளையும் பொருத்திக் காட்டி நன்கு பொருளை விளக்கி உள்ளார்.  பொய் கூறேன், மெய் கூறுவல்!
“மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற”                                    (291)
என்பது வள்ளுவர் அனுபவ மொழி.  வள்ளுவர் பெரிதும் போற்றிய இவ்வாய்மை அறத்தினைத் தம் வாழ்க்கை நெறியாக என்றென்றும் கடைப்பிடித்து வந்தவர்கள் சங்கச் சான்றோர்கள் ஆவர்."
      தமிழர்கள் பண்டைக்காலம் தொட்டு வாய்மை நெறியோடு வாழ்ந்து வந்ததை பறைசாற்றும் விதமாக புறநானூற்றுப் பாடல்கள் உள்ளன.  வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வரலாற்றை எடுத்து இயம்பிடும் விதமாக பாடல்கள் உள்ளன. 
      ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் சங்க இலக்கியம் தொடர்பாக சான்றோர்கள் எழுதிய கருத்துக்களை மேற்கோளாக வைத்து எழுதி இருப்பது நல்ல யுத்தி ஆகும்.
      கட்டுரையை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளன.  சங்க இலக்கியம் தொடர்பாக தமிழறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்கள் படித்து அதிலிருந்து தேன்துளி போல சேகரித்து மேற்கோள் காட்டியுள்ளது சிறப்பு”.
      சாமி சிதம்பரனார், மா. இராசமாணிக்கனார், ஜி. சுப்பிரமணியம் பிள்ளை, ஆ. வேலுப்பிள்ளை, என். வையாபுரி பிள்ளை, தமிழண்ணல் போன்ற மூத்த அறிஞர்கள் மட்டுமன்றி இன்றைய எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாருநிவேதிதா வரை சங்கத்தமிழ் குறித்து எழுதிய கருத்துக்களை மேற்கோள் காட்டி இருப்பது பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தது போல உள்ளது.
      இந்நூல் எழுதுவதற்கு துணை நின்ற 86 நூல்களின் பட்டியலும் நூலின் இறுதியில் உள்ளன.  படித்துப் பார்த்து வியந்து போனேன்.  நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உள்ளார்  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள். சங்க இலக்கியத்தின் களஞ்சியமாகத் திகழ்கின்றார்.

சங்க இலக்கியத்தின் ஆழ்ந்த புலமையை எடுத்துக்காட்டும் விதமாக நூல் உள்ளது. எழுதுவது மட்டுமல்ல, பேசும்போதும் சங்க இலக்கியப் பாடல்களை கையில் குறிப்பு எதுவுமின்றி மனப்பாடமாகவே சொல்லும் அளவிற்கு நினைவாற்றலுடன் திகழ்கின்றார்.  இன்றைய இளைய-தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த ஆளுமையாளராக நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் உள்ளார்கள்.
      "மூதறிஞர் இரா. இளங்குமரனார் குறிப்பிடுவது போல், ஓடும் நீரைத் தடுத்து நிறுத்திப் பயன்படச் செய்பவர் எவரோ அவர், ஓடும் கால வெள்ளத்தையும் ஓடாது தடுத்துத் தம்மை நிலைபெறச் செய்தவர் என்பது அரசும் குடிகளும் என்றும் போற்றத்தக்க கருத்தாகும்”.  (புறநானூறு : மக்கள் பதிப்பு ப.29)  "
நீரின் முக்கியத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘நீர் மேலாணமை’ பற்றி பாடல்களில் எடுத்து இயம்பி உள்ளனர்.  ஆனால் நாமோ இன்னும் உடைந்த மதகை சரி செய்ய முடியாமல் தண்ணீரைத் திறந்து விட்டு வீணாக கடலில் கலக்க விட்டு வேடிக்கை பார்த்து வருகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்களே தமிழ்நாட்டில் தண்ணீரைத் தடுக்க தடுப்பணைகள் ஏன் புதிதாக கட்டவில்லை என்று கேள்விகள் எழுப்பினார்கள்.  இன்னும் விழிக்கவில்லை தமிழகம் என்பது வேதனை.  இது போன்ற பல சிந்தனைகளை விதைத்தது இந்நூல்.
“வளர்தலும், தேய்தலும், இறத்தலும், பிறத்தலும் இவ்வுலகின் இயற்கை ; ஆகவே, வருந்தி வருவோர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அருள் செய்க”
இப்படி புலவன் அரசனுக்கு அறிவுரை சொல்லும் துணிவு அன்று இருந்தது.
நிலையற்ற வாழ்க்கையில் வள்ளல் தன்மை ஒன்றே உன்னை நிலைக்க வைக்கும் என்று அரசனுக்கு உணர்த்தி உள்ளனர் புலவர்கள்.  அரசர்கள் காலம் முடிவுக்கு வந்து அரசியல்வாதிகள் காலம் வந்து விட்டது.  இன்றைக்கு வாரி வழங்குவதை விட வாரிக் கொள்வதிலேயே கவனமாக உள்ளனர்.
புலவர்கள் மட்டுமல்ல அரசர்களும் அன்று பாடல் இயற்றி உள்ளனர். பரபரப்பான அரசாளும் பணிகளுக்கிடையே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி அரசர்களும் பாடல் எழுதிய வரலாறு படித்து வியந்து விட்டேன்.
ஔவையார் மன்னரைப் பாடும் அரசவைக் கவிஞராக மட்டுமல்லாமல், சமுதாயத்தில் பல்வேறு மக்கட்பிரிவினரையும் பாடும் மக்கள் கவிஞராகவும் மானுடம் பாடும் கவிஞராகவும் விளங்குகிறார்.
அரசனுக்கு அறிவுரை வழங்கும் இடத்தில் இரண்டு அரசர்கள் சண்டையிட்டால் சமாதானம் செய்து வைக்கும் உயர்ந்த இடத்தில் ஔவையார் இருந்துள்ளனர்.  சங்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்.  இன்றைக்கு பெண் கவிஞர்கள் பெருக வேண்டும். பெருகினால் இலக்கியம் பெருகும். தமிழன்னைக்கு மேலும் பல பெருமைகள் வந்து சேரும்.
      எழுத்து, பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வெற்றி நடையிட்டு வரும் தமிழ்அறிஞர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் இலக்கிய மகுடத்தின் வைரக்கல் இந்நூல்.  பாராட்டுக்கள்.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்