வண்ணத்துப் பூச்சியின் ஊஞ்சல் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி கவி வெற்றிச்செல்வி சண்முகம் !




வண்ணத்துப் பூச்சியின் ஊஞ்சல் !


நூல் ஆசிரியர் : கவிதாயினி 



கவி வெற்றிச்செல்வி சண்முகம் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு :
ஊருணி வாசகர் வட்டம், 22/105, பாஸ்கர் காலனி 3ஆவது தெரு, விருகம்பாக்கம், சென்னை-600 092. பக்கம் : 80, விலை : ரூ. 60



******

      நூல் ஆசிரியர் ராஜ கவி நகரின் வாழ்ந்து வரும் கவி வெற்றிச்செல்வி சண்முகம் அவர்கள் பெயரோடு ‘கவி’ சேர்த்துக் கொண்டதால் கவிதையின் வடிவங்களான புதுக்கவிதை, ஹைக்கூ வசமாகி வருகின்றது.  இது இரண்டாவது கவிதை நூல். முதல் ஹைக்கூ கவிதை நூல்.



      வண்ணத்துப்பூச்சியின் ஊஞ்சல் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  பாராட்டுக்கள்.  பல்வேறு இதழ்களில் மின்மினி, பொதிகை மின்னல், பாக்யா போன்றவற்றில் படித்து வியந்து இருக்கிறேன்.  மொத்தமாக நூலாகப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.



      நூலாசிரியர் கவி வெற்றிச்செல்வி சண்முகம் அவர்கள் M.Sc., B.Ed., M.Phil., பயின்றவர்.  அதிகம் பயின்றவர் என்ற செருக்கு எதுவுமின்றி மிக அடக்கமாக, பண்பாக இருப்பவர்.  முகநூல் தோழி.  மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை போட்டியில் கவிப் பேரரசி விருது பெற வந்தபோது இந்த நூலை வழங்கினார்.



      திரு. பால்கி அவர்களின் வாழ்த்துரையும், ஹைக்கூ கவிதையின் முன்னோடியும் எனது இனிய நண்பருமான பல்லவி குமார் அவர்களின் அணிந்துரையும், பதிப்பாளர் தேவகி இராமலிங்கம் அவர்களின் பதிப்புரையும் நூலாசிரியர் தன்னுரையும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.  பாராட்டுக்கள்.



      எண்ணிக்கை மறந்து
      மீண்டும் மீண்டும் நட்சத்திரங்களை
      எண்ணிக் கொண்டேயிருக்கிறது நிலா!



      ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் போலவே இயற்கையை, நிலவைப் பாடி உள்ளார்.  நட்சத்திரங்களை நாம் தான் எண்ணுவோம்.  நிலவே எண்ணுவதாக எண்ணம் நல்ல கற்பனை.



      பாராட்டுக்கள்



      அன்னை தேசத்தில் நீ
      அந்நிய தேசத்தில் நான்
      நம்மைப் போலவே காய்கிறது நிலா!



      சங்க இலக்கியப் பாடல் போலவே காதல் பிரிவை நிலவோடு ஒப்பிட்டு உணர்த்தியது சிறப்பு.



      விரல்கள் இல்லாமல்
      வீணை மீட்டுகின்றன

      விழிகள்!



      கண்ணும் கண்ணும் நோக்குவது குறித்து பலரும் பலவிதமாக எழுதி உள்ளனர்.  வீணை மீட்டுதலோடு ஒப்பிட்டு புது விதமாக எழுதியது சிறப்பு.



      முட்களில்லாமலேயே
      குத்திக் கிழிக்கின்றன
      சொற்கள்!



      வன்சொல் பேசுவது கூடாது.  அப்படிப் பேசினால் கேட்பவரின் உள்ளம் கிழியும், மனம் புண்படும் என்பதை அழகாக உணர்த்தி உள்ளார்.



      உணர்வுகளைக் கொன்று
      உறவுச் சிறைகளுக்குள்
      பெண்கள்!



      சில பெண்களின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டி உள்ளார்.  ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதே இல்லை என்பதை அழகாக உணர்த்தி உள்ளார்.



      தனம் இல்லாமலேயே
      மூலதனம் எழுதிய மாமேதை
      மார்க்ஸ்!



      மார்க்சிடம் பணம் இல்லை வறுமை வாட்டியது.  இறந்த குழந்தையின் இறுதிச் சடங்கிற்குக் கூட பணமின்றி வாடியவன் அவன் தந்த மூலதனம் தான் பொதுவுடைமை மலர்ந்திட காரணியாக அமைந்தது.  ஹைக்கூவில் உணர்த்தியது சிறப்பு!



தலை தீபாவளி
நகைக் கடையில் மகள்
அடகுக் கடையில் அப்பா!



ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் வரதட்சணைக் கொடுமையாலும் தங்க விலை ஏற்றத்தாலும் அடையும் இன்னலை கண்முன்னே காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.



கூட்டுப் பிரார்த்தனை
      வேண்டுதல்கள் மட்டும்   
      தனித்தனியே!



இந்த ஹைக்கூ கவிதையை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், “உளவியல் உலகியல் இரண்டும் இழைகின்றன்” என்று பாராட்டி உள்ளார்.

 உண்மை தான், எல்லோரும் நான் நல்லா இருக்க வேண்டும், என் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்றே வேண்டுகின்றனர்.  ஊர் நல்லா இருக்க வேண்டும், உலகம் நல்லா இருக்க வேண்டும் என்று யாரும் வேண்டுவதே இல்லை.



மகளிர் தினத்திலும்
போகி கொண்டாடலாம்
ஆணாதிக்கம் எரித்து!



ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கம் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  மனம் நொந்து வெந்து ஆணாதிக்கம் எரிக்க வேண்டுமென்று பெண்ணியம் பாடி உள்ளார்.



நினைவிலிருந்து அழியவில்லை
      எச்சில் தொட்டு அழித்தழித்து
      எழுதிய சிலேட்டு!



படிக்கும் வாசகர்கள் அனைவர்களுக்கும் அவர்களது பள்ளிப்பருவத்து நாட்களை நினைவூட்டி வென்று விடுகிறார்.



ஒழுக்கம் தராத
      கல்வி
      கறை!



உண்மை தான்.  படித்த இளைஞர்கள் பலர் ஒழுக்கம் தவறும் நிகழ்வுகள் தினமும் செய்தியாக வருகின்றன. படிப்பை விடச் சிறந்தது ஒழுக்கம் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.



குளம் நிறைய தாமரைகள்
      முகம் பார்க்க முடியாமல்
      நிலா!



இயற்கையைக் காட்சிப்படுத்தும் விதமாக பல கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.  முகநூலிலும் தொடர்ந்து எழுதி வருபவர். நூல் ஆசிரியர் கவி வெற்றிச்செல்வி சண்முகம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

கருத்துகள்